×

வாக்கு சேகரிக்க இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ளதால் தமிழகத்தில் மோடி, ராகுல் சூறாவளி பிரசாரம்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால் மோடி, ராகுல் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிட்டுள்ளனர். அதே நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்கான பிரசாரம் வரும் 21ம் தேதி மாலையுடன் நிறைவடைய உள்ளது. இன்னும் 3 நாட்கள் தான் தேர்தல் பிரசாரத்திற்கு கால அவகாசம் உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒரு நாளைக்கு 2 நகரங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். மேலும் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனி, திண்டுக்கல்லில் பிரசாரத்தில் ஈடுபட் டார். அதன்பிறகு, இரவில் திண்டுக்கல்லில் பிரசாரத்தை முடித்துவிட்டு கார் மூலம் நள்ளிரவு 12.15 மணிக்கு திருப்பூர் வந்தடைந்தார்.

திருப்பூர் குமார்நகரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் அவர் தங்கி ஓய்வு எடுத்தார். இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி வேட்பாளருமான தினேஷ்குமார், பல்லடம் தொகுதி வேட்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து பேசினர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் எஸ்ஏபி தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்திற்கு சென்றார். அங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் சுமார் 20 ஆண், பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது வேலை எவ்வாறு உள்ளது, குறைகள் உள்ளதா?, திமுக ஆட்சி எவ்வாறு உள்ளது? என கேட்டறிந்தார். பின்னர், வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருப்பூர் பாண்டியன் நகரில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, திருப்பூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் 8 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து கார் மூலம் சென்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். முதல்வருடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயல் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பிரசாரம் செய்ய உள்ளார். பிரசார கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவு கோவை விமான நிலையம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

மேலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, கமலஹாசன், செல்வபெருந்தகை, ப.சிதம்பரம், பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், பெ.சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் தேர்தல் களத்தில் குதித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான அன்புமணி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பாஜக தலைவர்களும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அடுத்து பல்வேறு மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளனர். அதே போல தவெக தலைவர் நடிகர் விஜயும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ, பொதுக்கூட்டம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும், நாதக வேட்பாளர்களை ஆதரித்து 234 தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. அதாவது, வருகிற 21ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய உள்ளது. இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே நாளில் இன்று தமிழகம் வந்துள்ளனர். தமிழகம் வந்துள்ள அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களது அணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கின்றனர். பிரசாரத்திற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 5.45 மணிக்கு கோவை விமானநிலையம் வருகிறார்.

பின்னர் அங்கிருந்து ஜீப்பில் அவிநாசி சாலையில் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் கொடிசியா மைதானம் வந்தடைகிறார். பிரதமர் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக சுமார் 3 கி.மீ தூரத்துக்கு பொதுமக்கள் பிரதமரை வரவேற்கும் விதமாக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கபட்டுள்ளது. பின்னர் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 21 வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி இரவு 7.30 மணிக்கு தனி விமானத்தில் மேற்கு வங்கம் புறப்பட்டு செல்கிறார்.

அதே நேரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று காலை 11.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு காலை 11.45 மணிக்கு சென்றடைந்தார். அங்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். தொடர்ந்து அவர் நண்பகல் 12.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு சோளிங்கர் வந்தார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினத்தை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அதைத்தொடர்ந்து சோளிங்கரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்சிக்கு ராகுல் காந்தி சென்றார். திருச்சியில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 4.05 மணிக்கு துறையூர் சென்றடைந்தார். மாலை 4.15 மணி முதல் மாலை 5 மணி வரை துறையூரில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். பின்னர், மாலை 5.10 மணிக்கு துறையூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு திருச்சி சென்றடைகிறார். திருச்சியில் இருந்து மாலை 5.40 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து வருகிற 20ம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ராகுல்காந்தி நாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலினுடன் பிரசாரம் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றிரவு கோவைக்கு வருகிறார். அவர், நாளை ஈரோடு, மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் வாக்கு சேகரிக்கிறார். இதனையடுத்து, கோவையில் இருந்து சென்னைக்கு வரும் அவர், மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தேசிய, மாநில தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்வதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 234 சட்டப்பேரவை தொகுதியும் தேர்தல் களைக்கட்டியுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதோடு இணைந்த மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் மோடி அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பு நாடு முழுவதும் பரவி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்து மசோதா தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்திற்கு வர உள்ளனர். அவர்கள் இந்த மசோதா தோல்வி சம்பந்தமாக என்ன பேச போகிறார்கள்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Modi ,Rahul ,Tamil Nadu ,M.K. Stalin ,Edappadi ,Chennai ,assembly ,Chief Minister ,Edappadi Palaniswami ,
× RELATED புது வரலாறு படைத்துள்ள திமுகவை...