கோவை: கோவையில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர்; “வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும், அதை வாங்கி வந்த பெருமை எல்லாம் மக்களைச் சேரும். நேற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள மகிழ்ச்சியோடு மேட்டுப்பாளையம் வந்துள்ளேன்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்த தேஜஸ்வி, அகிலேஷக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி மறுவரையறை என்பது பாஜகவுக்கு மட்டுமே சாதகமான சட்டம். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் தமிழ்நாடு நிச்சயமாக வாழ வைக்கும். திராவிட மாடல் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல்முறையாக யானை கிராமங்களுக்கு நுழைவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம். சவாலான பணியான உதகை மலையில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். 768 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குன்னூரில் புதிய அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது, நீலகிரியில் பாலாடைக் கட்டி தயாரிப்பு ஆலை அமைப்பு.
திமுக ஆட்சியே மகளிருக்கானது என்பதை சொல்லவே விடியல் பயணத் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டேன். பெண்களின் உழைப்பு இல்லாமல் இந்த உலகமே இல்லை. பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34% அதிகரித்துள்ளது. பெண் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என உருவாக்கப்பட்டது புதுமைப்பெண் திட்டம்.மாணிக்கமாக இருந்த திமுகவை, தொகுதி மறுவரையறை மூலம் பாட்ஷாவாக மாற்றிவிட்டார்கள்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இந்திய அளவில் திமுக ஹீரோவாகி உள்ளது” என கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
