பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியன் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்ட இறுதிப் போட்டியில் நேற்று, ஆஸியை சேர்ந்த 18 வயது இளம் வீரர் கவுட் கவுட் வெற்றி பெற்றார். ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியன் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுட் கவுட் (18), 19.67 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்திருந்தார். அதன் மூலம், ஓட்ட போட்டிகளில் ஜாம்பவானாக கருதப்படும் உசேன் போல்ட்டின் சாதனையை கவுட் முறியடித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றில் கவுட் கவுட் 10.21 நொடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இருப்பினும், அவரால், கடந்த 2003ல், பேட்ரிக் ஜான்சன் நிகழ்த்திய ஆஸ்திரேலியா தேசிய சாதனையை (9.93 நொடிகள்) முறியடிக்க முடியாமல் போனது. நேற்றைய போட்டியில் சேவியர் பீகாக் 10.35 நொடிகளில் கடந்து 2ம் இடமும், உவெஸோ லுபெண்டா 10.37 நொடிகளில் கடந்து 3ம் இடமும் பிடித்தனர்.
