தாலுகா அலுவலகத்தை தன்னார்வலர்கள் முற்றுகை

சேந்தமங்கலம், ஏப்.18: கொல்லிமலை ஒன்றியத்தில் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்காததால், குழந்தைகளுடன் தாலுகா அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் பணிகள் நிறைவு பெற்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், இப்பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்கவில்லை. இதுகுறித்து பல முறை கொல்லிமலை தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள் நேற்று காலை கைக்குழந்தைகளுடன் தாலுகா அலுவலகம் வந்தனர்.

ஆனால் தாலுகா அலுவலக அலுவலர்கள் அனைவரும், தேர்தல் பணிக்காக சென்று விட்டதால், நீண்ட நேரம் அலுவலக வாசலில் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து பெண் ஒருவர் கூறுகையில், ‘கொல்லிமலை ஒன்றியம் முழுவதும் 14 ஊராட்சிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்களுக்கு நடந்து சென்று, வாக்காளர் சிறப்பு திருத்த செய்யும் பணியில் ஈடுபட்டோம். ஆனால், இதுவரை ஊதியம் வழங்கவில்லை. ஊதியம் வழங்கக்கோரி பல முறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி விட்டதால், எங்களுக்கு ஊதியம் வழங்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Related Stories: