பூந்தமல்லி, ஏப்.18: மனைவியுடன் தொடர்பு என சந்தேகப்பட்டு மகனை கத்தியால் வெட்டிக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (50), பெயின்டர். இவரது மனைவி லோகநாயகி (43). இவர்களுக்கு சதீஷ் (20) என்ற மகனும், சங்கீதா (18), என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், மனைவி மீது சந்தேகமடைந்த சக்திவேலு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மனைவியுடன் தனது மகன் சதீஷுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு மகனிடமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி இரவு சதீஷ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சக்திவேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகனை சரமாரியாக வெட்டினார். இவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த மனைவி மற்றும் மகளையும் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மனைவி மற்றும் மகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ராயலா நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் புரட்சிதாசன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
