×

மும்பையை பந்தாடியது பஞ்சாப்

மும்பை: மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 24வது போட்டி மும்பை வாங்கடே திடலில் நேற்று நடந்தது. அதில், மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் மும்பை தொடக்க வீரர் ரையான் ரிக்கெல்டனும் (2 ரன்), அடுத்த பந்திலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவும் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தனர்.

இருப்பினும், மற்றொரு தொடக்க வீரர் குவின்டன் டிகாக், நமன் திர் இணை சேர்ந்து பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சிறப்பாக ஆடிய டிகாக், 28 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். சிறிது நேரத்தில் நமன் திர் 29 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவர் (50 ரன், 31 பந்து) சஷாங்க் சிங் வீசிய 14வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். சேவியர் பார்ட்லெட் வீசிய 17வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்த டிகாக், 100 ரன்களை கடந்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரில், சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சனுக்கு பின், 2வது சதமாக, குவின்டன் டிகாக் சதம் விளாசி அசத்தினார். மார்கோ யான்சன் வீசிய 18வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா (14 ரன்), அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் ஷெர்பேன் ரூதர்போர்ட் (1 ரன்) ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி, 6 விக்கெட் இழந்து, 195 ரன் எடுத்தது. குவின்டன் டிகாக் 112 ரன்களுடன் (60 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து எளிதாக வென்றது. அபாரமாக ஆடிய தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 80 ரன்னுடன் (39 பந்து, 2 சிக்சர், 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்தில் 66 ரன் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

Tags : Mumbai ,Punjab ,Punjab Kings ,IPL T20 ,Mumbai Indians ,IPL 19th series ,Wangade Thidal, Mumbai ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...