×

கேண்டிடேட்ஸ் செஸ்: வைஷாலி சாம்பியன்; ரூ.88 லட்சம் பரிசு பெற்றார்

பாபோஸ்: சைப்ரஸ் நாட்டில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் மகளிர் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றதோடு, நடப்பு மகளிர் உலக செஸ் சாம்பியன் உடன் மோதும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். சைப்ரஸ் நாட்டின் பாபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. ஓபன் பிரிவில் நடந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பங்கேற்றார். 14 சுற்று போட்டிகள் முடிவில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அவர், தமிழகத்தை சேர்ந்த நடப்பு உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் இந்தாண்டு இறுதியில் மோதவுள்ளார். 14 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 6 புள்ளிகள் மட்டுமே பெற்று 7ம் இடம் பிடித்தார்.

மகளிர் பிரிவில் நடந்த போட்டிகளில் பிரக்ஞானந்தாவின் சகோதரியும், இந்திய கிராண்ட் மாஸ்டருமான வைஷாலி, கஜகஸ்தான் வீராங்கனை பிபிஸாரா அசாபயேவா ஆகிய இருவரும் 13 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த 14வது சுற்றுப் போட்டியில் வைஷாலி, உக்ரைன் வீராங்கனை கேதரீனா லாக்னோவுடன் மோதி அபார வெற்றி பெற்றார். அதேசமயம், பிபிஸாரா, இந்திய கிராண்ட் மாஸ்டர் திவ்யா தேஷ்முக் உடன் மோதிய போட்டி டிரா ஆனது. எனவே, வைஷாலி, 14 சுற்றுகள் முடிவில் 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

பிபிஸாரா, 8 புள்ளிகளுடன் 2ம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு ரூ. 88 லட்சம் பரிசுத் தொகை மற்றும் போனஸ் பரிசுத் தொகை கிடைத்தது. இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் மகளிர் பிரிவு போட்டியில் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வைஷாலி படைத்துள்ளார். இந்தாண்டு இறுதியில் நடக்கும் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான போட்டியில், சீனாவை சேர்ந்த நடப்பு உலக செஸ் சாம்பியன் ஜு வென்ஜுன் உடன் வைஷாலி மோதவுள்ளார். அதில் வெற்றி பெறுபவர், மகளிர் பிரிவில் புதிய உலக சாம்பியனாக உருவெடுப்பார்.

Tags : Paphos ,Grand ,Master ,Vaishali ,Tamil Nadu ,Candidates Chess Women's Division Tournament ,Cyprus ,Women's World Chess Champion.… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: குஜராத் அணிக்கு...