தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்: இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு; திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். சுமார் 18 மணி நேர விவாதத்திற்கு பிறகு இன்று மாலை 4 மணிக்கு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை 2029ம் ஆண்டு மக்களவை தேர்தலிலேயே நடைமுறைப்படுத்தவும், அதற்காக தொகுதிகளின் எண்ணிக்கை 543ல் இருந்து அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கவும் அரசியலமைப்பு 131வது சட்ட திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்தம் ஆகிய 3 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு அமர்வு நேற்று கூடியது.

இதில் தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டாக எதிர்க்க இந்தியா கூட்டணி முடிவு செய்திருந்தது. இந்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், 3 மசோதாக்களை சேர்த்து அறிமுகப்படுத்தும் அரசின் முடிவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை சாதாரண மற்ற 2 மசோதாக்களுடன் சேர்ந்து விவாதிக்க முடியாது என காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார். திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘நாங்கள் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் தற்போதைய மசோதா தொகுதி மறுவரையறையை நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்றார். 40 நிமிட காரசார விவாதத்திற்கு பிறகு 3 மசோதாக்களையும் சேர்த்து தாக்கல் செய்ய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 251 எம்பிக்கள் ஆதரவாகவும், 185 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

அதைத் தொடர்ந்து, 3 மசோதாக்களை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்து விவாதத்தை தொடங்கி வைத்து பேசுகையில், ‘‘தொகுதி மறுவரையறை சட்டம் மூலம் மக்களவையின் பலம் 815 ஆக உயரும். இதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். பெண்கள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பிறகு எந்தவொரு மாநிலத்திற்கும் எவ்வித இழப்பும் ஏற்படாது. மக்களவையின் தற்போதைய எம்பிக்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் கூடுதல் ஏற்படும். இந்த மசோதாவை அனைத்து கட்சி எம்பிக்களும் முழு மனதுடன் ஆதரித்து நிறைவேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.

பின்னர் நடந்த விவாதத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் என காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மூலம் தொகுதி மறுவரையறை மசோதாவை அரசு திணிக்கப் பார்ப்பதாக காங்கிரஸ் எம்பி கோகாய் கூறினார். விவாதத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, ‘எந்த மாநிலமும் பாகுபாட்டிற்கு உள்ளாகாது’ என உறுதி அளித்தார். ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பாஜ கூட்டணி கட்சி எம்பிக்கள் மசோதாக்களை ஆதரித்து பேசினர்.

இந்த தொகுதி மறுவரையறை மூலம் அதிகம் பாதிக்கப்படப் போவது தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களே என்ற கருத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘தென் மாநிலங்களுக்கான இடங்களின் எண்ணிக்கை உயருமே தவிர குறையாது அதிகரிக்கும்’’ என்றார். இதனால் நேற்று நாள் முழுவதும் காரசார விவாதம் நடந்தது. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் சுமார் 15 முதல் 18 மணி நேரம் நடத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். இன்னும் மசோதாக்கள் மீதான விவாதம் தொடரும்.

தென்மாநிலங்களுக்கு எத்தனை தொகுதிகள்?
மாநிலம் தற்போதைய நிலை தற்போதைய சதவீதம் 50 சதவீத உயர்வுக்கு பின்னர் புதிய நிலை
1. கர்நாடகா 28 5.15 42 5.14
2. ஆந்திரா 25 4.60 38 4.65
3. தெலங்கானா 17 3.13 26 3.18
4. தமிழ்நாடு 39 7.18 59 7.23
5. கேரளா 20 3.68 30 3.67
மொத்தம் 129 23.76 195 23.87

* மசோதா நிறைவேறுமா?
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலம் ஆளும் என்டிஏ கூட்டணியிடம் இல்லை. மக்களவையில் உள்ள மொத்த எம்பிக்களில் 54 சதவீதத்தை அதாவது 293 எம்பிக்கள் ஆதரவை என்டிஏ பெற்றிருந்தாலும் எதிர்க்கட்சிகள் வசம் 233 எம்பிக்கள் உள்ளனர். 7 உறுப்பினர்கள் சுயேச்சைகளாக உள்ளனர். மேலும் 7 உறுப்பினர்கள் ஒய்எஸ்ஆர், ஏஐஎம்ஐஎம் மற்றும் சிரோமணி அகாலி தளம் போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அரசியலமைப்புத் திருத்த மசோதா உட்பட இம்மசோதாக்களை நிறைவேற்ற, அவை விதிகளின்படி 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இது, அவையில் ஆஜராகி வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்காகும். மக்களவையில் இம்மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்க வேண்டுமெனில், சமாஜ்வாடி (37 எம்பிக்கள்), திரிணாமுல் காங்கிரஸ் (28) அல்லது திமுக (22) ஆகிய முக்கிய எதிர்க்கட்சிகளில் குறைந்தது 2 கட்சிகளாவது வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருக்க வேண்டும். மக்களவையில் காங்கிரஸ் கட்சி 98 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மறுபுறம், என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளில், மக்களவையில் பாஜ 240, தெலுங்கு தேசம் 16, ஜேடியு 12 உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஒருவேளை இம்மசோதாக்களுக்கு மக்களவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், அவை மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது. மாநிலங்களவையில், என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக 141 எம்பிக்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 83. மாநிலங்களவையில் அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற வேண்டுமெனில், ஆளும் கூட்டணிக்கு 163 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், நியாயமான வழியில் இரு அவையிலும் இம்மசோதாக்கள் நிறைவேற்ற வாய்ப்பில்லை.

Related Stories: