தொகுதி எல்லை மறுசீரமைப்புப் பணியில் எந்த மாநிலமும் பாகுபாட்டிற்கு உள்ளாகாது: மக்களவையில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: தொகுதி எல்லை மறுசீரமைப்பு பணியில் எந்த மாநிலமும் பாகுபாட்டிற்க்கு உள்ளாகாது என்று மக்களவையில் பிரதமர் மோடி உறுதி அளித்தார். மக்களவையில் 3 மசோதா மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த யோசனை 25-30 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. உள்ளாட்சித் அமைப்புகளுக்கான தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன்வந்தவர்கள், நாடாளுமன்றத்தில் அளிக்க முன்வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், இந்த முக்கியமான வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது.

21-ஆம் நூற்றாண்டில், இந்தியா ஒரு புதிய தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்றைய உலகில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். எனவே நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள், கொள்கை உருவாக்கத்தில் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். நம் நாட்டில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கியதிலிருந்து, அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், பெண்களுக்கான இந்த உரிமையை எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னித்ததில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு நாட்டின் ஜனநாயகத்துக்குச் சாதகமாக அமையும். நாட்டின் கூட்டு முடிவெடுக்கும் செயல்முறைக்கு வலுசேர்க்கும்.

மேலும், இதற்கான பெருமை நம் அனைவருக்கும் உரித்தானதாக இருக்கும். இதற்கான முழு உரிமையும் ஆளுங்கட்சிக்கோ அல்லது மோடிக்கோ மட்டும் உரியதல்ல. அதேபோல, இங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களுக்கு மட்டும் உரியதல்ல. இதற்கு ஒரு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றே நான் கருதுகிறேன். அதே போல் பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதுடன் தொடர்புடைய தொகுதிகளின் எல்லை மறுசீரமைப்புப் பணியில், பெரியதோ அல்லது சிறியதோ, வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்த மாநிலமும் பாகுபாட்டிற்கு உள்ளாகாது . இந்தச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்களை நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

நீங்கள் இதை எதிர்த்தால், எனக்கு அரசியல் ரீதியாகப் பலன் கிடைப்பது இயல்புதான்; ஆனால் நீங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டால், யாருக்கும் தனிப்பட்ட அரசியல் ஆதாயம் எதுவும் கிடைக்காது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு பெறுவது பெண்களின் அடிப்படை உரிமை என்பதால், நாட்டின் பெண்களுக்குத் தாங்கள் ஏதோ ஒன்றை ‘தானமாக’ வழங்குவதாக யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது. இன்று, இந்த விஷயத்தை அரசியல் கண்ணோட்டத்தில் எடைபோட வேண்டாம் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கவே நான் வந்துள்ளேன்.

இது தேசிய நலன் சார்ந்த ஒரு முடிவாகும். நாடு முழுவதும் உள்ள பெண்களும், உலகெங்கிலும் உள்ள பெண்களும் நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்; நமது முடிவுகளை அவர்கள் கவனிப்பார்கள். ஆனால், முடிவை விடவும் முக்கியமாக, அவர்கள் நமது நோக்கத்தையே மதிப்பிடுவார்கள். நமது நோக்கத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், இந்நாட்டுப் பெண்கள் ஒருபோதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். 2023-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நடைபெற்றபோது, ​​மக்கள் இதை விரைந்து நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் அதைச் செய்து முடிப்பது சாத்தியமில்லாததால், 2024ஆம் ஆண்டில் அதை நிறைவேற்ற இயலவில்லை. இப்போது 2029ஆம் ஆண்டில், நமக்குப் போதுமான கால அவகாசம் உள்ளது. 2029ஆம் ஆண்டிலும் நாம் இதைச் செய்யத் தவறினால், நிலைமை எத்தகையதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். இனிமேல் சற்றும் தாமதிக்காமல் இதை நிறைவேற்றுவதே காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு பேசினார்.

* தமிழில் உறுதி அளிக்க தயார்
பிரதமர் மோடி பேசுகையில்,’நாங்கள் எந்தப் பெருமையையும் விரும்பவில்லை. நான் உறுதிமொழி என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் அந்த வார்த்தையையே பயன்படுத்துகிறேன். நான் வாக்குறுதி என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் அந்த வார்த்தையையே பயன்படுத்துகிறேன். ஏனெனில், நோக்கம் தெளிவாக இருக்கும்போது, ​​வார்த்தை ஜாலங்கள் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தமிழில் இதற்கு பொருத்தமான வேறு உரிய வார்த்தை இருந்தால் அதையே சொல்லவும் நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Related Stories: