பண்ருட்டி, ஏப். 17: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழிருப்பு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (55). இவர் பைக்கில் ஊர் ஊராக சென்று மிக்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகன் பிரகாஷ் (29) வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். பிரகாஷ் கடந்த 15 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மணிகண்டன் அவரது மனைவியை அடித்துள்ளார். அப்போது வீட்டில் குடி போதையில் இருந்த பிரகாஷ் இதை தட்டிக்கோட்டார். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் திடீரென அங்கு கிடந்த உருட்டுகட்டையை எடுத்து மணிகண்டன் தலையில் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு பதிவு செய்து தந்தையை கொன்ற மகன் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
