×

பண்ருட்டி அருகே பறக்கும் படை சோதனையில் சிக்கிய ஸ்கேன் மெஷின்

பண்ருட்டி, ஏப். 16: பண்ருட்டி அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிசுவின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் மெஷின் சிக்கிய நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி கும்பகோணம் சாலை சாத்திப்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில், கருவில் உள்ள குழந்தையை (சிசு) ஆணா பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் மெஷின் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் அலுவலர் கமலம், உதவி தேர்தல் அலுவலர் பலராமன் ஆகியோர் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அரசு தலைமை மருத்துவர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்கு வந்து மிஷினை ஆய்வு செய்தார். அப்போது காரில் கடத்திவந்த மெஷின் உரிமம் இல்லாதது என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து, விருத்தாச்சலம் வட்டம் கொடுக்கூரைச் சேர்ந்த வெங்கடேசன் (45), ஐயப்பன் (36) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில் இருவரும் சட்ட விரோதமாக ஸ்கேன் சென்டர் நடத்தி சிசு பாலினத்தை தெரிவித்து வந்தது தெரியவந்துள்ளது.

Tags : Panruti ,Kumbakonam road ,Panruti, Cuddalore district ,Sathipattu ,
× RELATED போதை பொருள் கடத்தல் வழக்கில் கடலூர் முதியவருக்கு 10 ஆண்டு சிறை