சேத்துப்பட்டு, ஏப். 17: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட வெண்மணி கூட்டு ரோடு பகுதியில் பறக்கும் படை அலுவலர் பெரியசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்றுமுன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த தனியார் பேருந்தை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் லக்கேஜ் அறையைத் திறந்து பார்த்த அதிகாரிகளுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு பையைச் சோதித்தபோது, அதில் சுமார் 10 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனை நடப்பதைக் கண்ட பேருந்தில் இருந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து இருட்டில் தப்பி ஓடினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைத்த போலீசார், பேருந்தை போளூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 சூட்கேஸ்கள் உள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் சூட்கேஸை சோதனை செய்தபோது மேலும் அதில் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த சூட்கேஸ்ட்கள் பேருந்தில் இருந்ததும் தெரியவந்தது. மொத்தம் 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த டிரைவர் அஜீப், மதுரையைச் சேர்ந்த ராஜ் முகம்மது, மற்றும் புக்கிங் புரோக்கர் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஒருவரின் முகம் பறக்கும் படையினர் வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் அந்த இருவரை தேடி வருகின்றனர்.
