×

தேர்தல் பணிகளை செய்யாமல் 3.5 கிலோ தங்கம் மோசடியை விசாரிக்க ராஜஸ்தான் விரைந்த தனிப்படை: அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தேர்தல் நேரத்தில் தேர்தல் பணிகளை செய்யாமல், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக 3.5 கிலோ தங்க நகை மோசடியை விசாரிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மகாவீர் மேத்தா (51). யானைகவுனி போலீசில் அளித்த புகாரில், ‘நான் சவுகார்பேட்டையில் நகைக்கடை வைத்துள்ளேன். தங்க நகைகளுக்கு ஹால் மார்க் சீல் வைப்பதற்காக சவுகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் கொடுப்பது வழக்கம். வழக்கம்போல, என் மகன் ராகுல் மேத்தா, கடையில் வேலை செய்யும் சக்தி சிங் ஆகியோர் 3.5 கிலோ தங்க நகைகளை எடுத்துச் சென்று கொடுத்தனர்.

அப்போது கொஞ்சம் நகைகளை வீட்டில் வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதனால் என் மகன் மட்டும் மீண்டும் வீட்டுக்கு வந்து நகைகளை எடுத்துக் கொண்டு சென்று நகைக்கடையில் ஹால்மார்க் போட ெகாடுத்தார். பின்னர் இரவில் நகைகளை வாங்க என் மகன் செல்லவில்லை. ஆனால் நகைக்கடையில் இருந்து எங்களுக்கு போன் செய்த ஊழியர்கள், நகைகளை ஊழியர் சக்தி சிங் வாங்கிச் சென்று விட்டார் என்று கூறினர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைப் பிடித்து நகைகளை வாங்கித் தரும்படி கூறியிருந்தார்.

இது திருட்டோ, கொள்ளையோ இல்லை. மோசடி வழக்கு. இதனால் வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார்தான் விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அனுப்பிவிட்டனர். ஆனால், இரு நாட்களுக்குப் பிறகு திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடகிடம் இருந்து போலீஸ் அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்து யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை போலீசார் ராஜஸ்தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து யானைகவுனி போலீசார் சக்தி சிங் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றவாளி மத்தியபிரதேசத்தில் இருப்பது தெரிந்ததால், தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் சென்றனர். ஆனால் சக்தி சிங், ராஜஸ்தான் சென்றது தெரியவந்தது. இதனால் தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் வழக்கமாக மோசடி வழக்குகளை போலீசார் விசாரிக்க மாட்டார்கள். சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தேர்தல் பணிகளில் ஈடுபடத்தான் நேரம் இருக்கும். ஆனால், குற்றவாளியைப் பிடிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதி வாங்காமல், தனிப்படை போலீசார் ஒவ்வொரு மாநிலமாக ஏன் செல்ல வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* பல லட்சம் லஞ்சம்
இது குறித்து விசாரித்தபோது, சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக்கிற்கு, ஒரு உயர் அதிகாரியிடம் இருந்து போன் வந்ததாகவும், அதன்பிறகுதான் அவர் உடனடியாக வழக்குப்பதிவு செய்யச் சொன்னதோடு, போலீசாரை தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வெளிமாநிலத்திற்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் விளையாடி இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை போலீஸ் கமிஷனராக அருண் இருந்தபோது, இதுபோன்ற மோசடி புகார் வந்தால், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுவார். ஏனெனில் நகை வியாபாரிகள் பலர் போலியான புகார் கொடுத்து, இன்சூரன்ஸ் பெற்று விடுவார்கள். இதனால் சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும்.

இதற்காக சட்டத்துறை அதிகாரிகளிடம் இருந்து கருத்து பெறப்படும். இதனால் பொய்யான புகார் கொடுப்பது தடுக்கப்படும். ஆனால் எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யாமல், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வெளிமாநிலத்துக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தமிழக போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு, வடமாநில அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால் டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் வடமாநில புரோக்கர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Rajasthan ,forces ,Chennai ,Mahavir Mehta ,Kilpauk, Chennai ,Yanakavuni police ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில் சிவப்பு...