×

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவிவகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் 2019ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2025ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்து குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து பதில்மனு தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனு தாக்கல் செய்துள்ள விவரத்தை தெரிவித்தும், தூத்துக்குடி நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Minister ,Anitha Radhakrishnan ,Chennai ,Anti-Corruption Bureau ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில் சிவப்பு...