×

தேர்தல் வழிமுறைகளை பின்பற்றாமல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரின் நேரடி நியமனம் சட்டவிரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு மனு

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி நியமன விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு நேற்று அனுப்பிய மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து, புதிய டிஜிபி நியமனம் குறித்து தமிழக அரசுக்கும், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

வழக்கமாக, மாநில அரசு மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை யுபிஎஸ்சிக்கு அனுப்பி, அதிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்வதே நடைமுறையாக இருந்தாலும், இங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இந்த செயல்முறை தாமதமடைந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிப்ரவரி 12ம் தேதி வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படி, நிரந்தர டிஜிபி நியமனம் நடைபெறும் வரை தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மார்ச் 12ம் தேதி நீதிமன்றம் வழங்கிய மற்றொரு உத்தரவின் மூலம், டிஜிபி தேர்வு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை மார்ச் 20க்குள் நடத்த வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டது. இதற்கிடையில், மார்ச் 15ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு, தமிழக அரசாங்கம் எந்தவொரு முக்கிய நிரந்தர நியமனத்தையும் மேற்கொள்ள முடியாது என்பது பொதுவான நடைமுறையாகும். இவ்வாறான சூழலில், கடந்த ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின் மூலம், 1992ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோரை தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு தற்போது பெரும் சர்ச்சைக்கு மையமாக உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. தேர்தல் நடைபெறும் காலத்தில், நிரந்தர நியமனங்கள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படைக் கொள்கைக்கு முரணானது. வழக்கமாக, இத்தகைய காலகட்டங்களில் ‘பொறுப்பு டிஜிபி’ அல்லது ‘இடைக்கால நியமனம்’ மட்டுமே செய்யப்பட வேண்டும். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தேர்தல் காலத்தில் இதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சந்தீப் ராய் ரத்தோரை நிரந்தர டிஜிபியாக நியமித்திருப்பது சட்டப்படி செல்லாது.

இது தமிழகத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் பாரபட்சமான நடவடிக்கையாகும். மேலும், டிஜிபி நியமனத்தில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை வழிகாட்டுதல்கள் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, மாநில அரசு அனுப்பும் மூன்று அதிகாரிகள் பட்டியலில் இருந்துதான் டிஜிபி தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த விதிகளை மீறி நேரடியாக நியமனம் செய்துள்ளது. மேலும், இது காவல் துறையின் அரசியல் சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கும் முக்கிய நடைமுறையாக கருதப்படுகிறது.

ஆனால், இந்த வழிமுறையை பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் நேரடியாக நியமனம் செய்திருப்பது சட்ட விரோதமானது. எனவே, 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும். சந்தீப் ராய் ரத்தோர் தேர்தல் முடியும் வரை மட்டுமே பொறுப்பு டிஜிபியாக இருப்பார் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு மாநில அரசே நிரந்தர டிஜிபியை முறைப்படி நியமிக்கும். எனவே, சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கத்தை வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : DGP ,Sandeep Roy Rathore ,TR Balu ,Election Commission ,Chennai ,DMK ,treasurer ,Election Commission of India ,Tamil Nadu Police ,Tamil Nadu Assembly ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தில் சிவப்பு...