மச்ச ஜெயந்தி-15-4-2026
விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரம். உலகின் முதல் உயிர் வாழ்க்கை நீரிலேயே உருவானதாக கூறுகிறது பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது. அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம். பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவம் எடுத்தார். ஒவ்வொரு சதுர் யுகம் முடிந்து, முதல் யுகமான கிருத யுகம் தோன்றும். பகவான், பல சதுர் யுகங்களில், பல முறை அவதாரம் எடுத்து உள்ளார். மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி (அரச முனிவர்), நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும்போது, கையில் ஒரு சிறு மீன் காணப்பட்டது.
அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், மீனை மீண்டும் நீரில் விட முயலும்போது,மீன், ‘‘மகரிஷியே, என்னை நீரில் விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை இரையாக்கி விடும். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டியது. அதன்படி முனிவர் அந்த மீனைத் தன் கமண்டலத்தில் போட, சிறிது நேரத்தில் அக்கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. பிறகு, அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதனுள்ளும் பெரிதாக வளர்ந்து விட்டது.
பிறகு குளத்திலும், பெரிய ஏரியிலும் விட்டார். அது மிகப் பெரிதாக வளர்ந்து விடவே, இறுதியில், சமுத்திரத்தில் கொண்டுபோய்விட முயலும்போது,” மகரிஷியே இந்தச் சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே. அது என்னைத் தின்று விடுமே” என்று கேட்டது. அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர், அவரிடம், “தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன?” என்று கேட்டார்.
“மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப்போகின்றன. அச்சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். அப்போது, பிரம்மனின் உறக்கம் முடியும்வரை மச்ச உருவில் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்” என்று கூறிவிட்டு மறைந்தார். அதன்பின்னர், மச்ச உருவில் தோன்றிய மகாவிஷ்ணுவை நோக்கி, சத்திய விரதன் தியானம் செய்து கொண்டிருந்தார்.
ஏழாவது நாளில், பெரிய பிரளயம் (மிகப் பெரிய வெள்ளம்) ஏற்பட, பெரியதோர் ஓடம் அங்கே வந்தது. மகாவிஷ்ணு கூறியவாறே, சப்த ரிஷிகளோடு மூலிகை வித்துக் களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, வாயுவால் ஓடம் அலைக்கழிக்கப்பட்டது. மச்சமூர்த்தி, தோன்றிப் படகைத் தன் கொம்புடன் சேர்த்து ஒரு பாம்பால் இறுகக் கட்டி ஓடம் கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார். பிறகு, மகாவிஷ்ணு மகரிஷிக்கு மச்ச புராணத்தை உபதேசித்தார்.
எம்பெருமான் இதுபோன்று வேதங்களை காக்க பலமுறை அவதாரம் செய்திருக்கிறார். ஹயக்ரீவன் எனும் அசுரனை கொன்று வேதங்களை பிரம்ம தேவரிடம் மீட்டுக் கொடுத்தார். காலக் கணக்குகள் மிகப் பெரியது. யுகம் யுகமாக உலகைக் கண்டால் எண்ணற்ற அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சத்தின் பிரமாண்டம் தெரியும்போது நமது அகங்காரத்தின் எடை குறைகிறது. அதைத்தான் நமது புராணங்கள் செய்கின்றன.
இவ்வளவு மகிமை வாய்ந்த மச்ச மூர்த்தி ஊத்துக்கோட்டை, நாகலாபுரத்தில் வேத நாராயண சுவாமி எனும் பெயரில் சேவை சாதிக்கிறார். முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் திருத்தலம் இது. இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி – பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் சூரிய பூஜையுடன் கூடிய தெப்பத் திருவிழாவும், பிரம்மோத்ஸவமும் முக்கியமானவை. மூலவர் மீது சூரிய ஒளியானது ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் விழுகின்றது. மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது, 25ம் தேதி பாதங்களிலும், இரண்டாம் நாள் 26ம் தேதி நாபியிலும் (வயிறு), மூன்றாம் நாள், 27ம் தேதி சுவாமியின் சிரசிலும் (தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.
கிருஷ்ண பக்தரான நாராயண பட்டத்ரி, ஒரு முறை வாத நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவத்தால் பலன் இல்லை என்று தெரிந்ததும், ஜோதிடர் ஒருவரிடம் நோய் குணமாக பரிகாரம் கேட்டு வரும்படி சீடனைப் பணித்தார். அதன்படி ஜோதிடரிடம் சென்று வந்த சீடன், ‘‘மத்ஸ்யம் தொட்டு ஊண்” என்று தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார் என்றான். நாராயண பட்டத்ரி, ஜோதிடர் சொன்னதற்கான உள்ளர்த்தம் புரிந்தது சந்நதிக்குச் சென்று, மச்சாவதாரம் தொடங்கி பகவானின் அவதாரச் சிறப்புகளையும் பெருமைகளையும் பாடி நோய் நீங்கப் பெற்றார். ஸ்ரீகுருவாயூரப்பனின் தரிசனமும் அவருக்குக் கிடைத்தது.
கிருஷ்ணா
