×

படிகளின் வழியே உயரத்தை அடைவது எப்படி?

சமயம், ஆன்மிகம் இந்த இரண்டும் ஒன்றுதான் என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இவை இரண்டும் வேறு வேறு; ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
சமயம் (religion) ஆன்மிகம்(spritual) என்ற இரண்டில் சமயம் என்பது வழி (way). ஆன்மிகம் என்பது இலக்கு, நோக்கம், பயன்.
சமயம் உலகத்தில் பல உண்டு. ஆன்மிகம் ஒன்றே ஒன்றுதான்.
எல்லாச் சமயங்களும் நிறைவாக உயிரின் நிலைப்பாடு பற்றியே பேசுகிறது, உயிர் என்பது நிரந்தரமானது (eternal).
ந ஜாயதே ம்ரியதே வா கடாசின்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: சாஷ்வதோயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே” (கீதை 2.20)
இந்த ஸ்லோகம், மனித உடல் மாறினாலும், உள்ளேயுள்ள ஆத்மா என்ற “உயிர்” எப்போதும் நிலைத்திருக்கும் என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறது. உடல் அழிந்தாலும், ஆத்மா(உயிர்) அழியாது. உயிரின் மூன்று நிலை பற்றி விவாதங்களும் கருத்துக்களும் எல்லாச் சமயங்களிலும் விவாதிக்கப்படுகிறது.
*உயிரின் முந்தைய நிலை (கடந்த காலம்)
*நடக்கும் காலம்
*உயிரின் எதிர்கால நிலை (எதிர்காலம்)
எங்கிருந்து வந்தோம், எங்கே போகப் போகிறோம் என்கிற சிந்தனை ஏதோ ஒரு வகையில் இங்கே இருக்கிறது.
அது தேடுவது உறுதியான முடிவை. அந்த முடிவை நோக்கி நகர்வது சமயங்கள்.
அந்த முடிவு என்பது உயிரின் எதிர்காலம் அதாவது சந்தோஷம். (eternal peace) அதற்கான வழிகள் சமயங்கள்.
உயிரின் கடந்தகாலம், நிகழ்காலத்தை நிர்ணயித்து கொடுத்தாலும், நிகழ்காலத்தின் செயல்களே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
நஞ்சை நிலமோ புஞ்சை நிலமோ ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறது. நஞ்சையை மேம்படுத்துவதோ, அல்லது எதற்கும் லாயக்கில்லாத வறட்டு நிலமாக ஆக்குவதோ உங்கள் செயல்பாடுகளில் அடங்கியிருக்கிறது.
சிலர் புஞ்சையை நஞ்சை நிலமாக ஆக்கி பயிர்விளைவிப்பார்கள்.
அது அவர்களுக்கும் சமூகத்துக்கும் பயன்படும்.
ஆனால், கையில் உள்ள நிலத்தை பாழாக்குவதோ, பயிராக்குவதோ நிகழ்கால செயல்பாட்டைப் பொறுத்து இருக்கிறது.
நிலமே இல்லாதவன் என்ன செய்வது என்ற கேள்வியும் காதில் விழுகிறது.
நிலம் என்ற ஒன்றை அடைவதும் நிகழ்கால செயல்பாடுகளில் அடங்கியிருக்கிறது.
பூர்வீக வீடு இல்லாதவர்கள் நிகழ்காலத்தில் உழைத்து நல்லதோர் வீட்டைக்கட்டி, தனக்குரியதாக ஆக்கிக் கொண்டு வாழ்வதில்லையா, என்ன?
அப்படியே இதை ஆன்மிகத்திற்குக் கொண்டு வாருங்கள்.
நல்ல மனம், நல்ல சிந்தனைகள் என்பது நஞ்சை நிலத்திற்கான குறியீடு .
தீய மனம், கெட்ட சிந்தனைகள் புஞ்சை நிலத்திற்கான குறியீடு.
புஞ்சை நிலம் நஞ்சை நிலம் ஆவதுண்டு;
நஞ்சை நிலம் புஞ்சை நிலம் ஆவதுண்டு.
நஞ்சை நிலத்திற்கான குறியீடாக தேவர்களையும் புஞ்சை நிலத்திற்கான குறியீடாக அசுரர்களையும் சமய நூல்கள் சொல்லுகின்றன. சமய நூல்களின் கதைகள் விவரிக்கின்றன.
தத்துவப் புரிதலுக்காகச் சொல்லப்பட்ட பல கதைகளை, நாம் இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து சங்கடப்படுகிறோம்.
அந்தச் சங்கடம் தேவையில்லை.
முள்ளாக இருக்கும் பலாத்தோலை யாரும் உண்பதில்லை.
அது உள்ளே இருக்கும் சுளையைக் காப்பாற்றும் உறை.
உள்ளே இருக்கும் சுளைகள் தான் முக்கியம்.
எனவே, கதைகளை அப்படியே எடுத்துக்கொண்டு நாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. சுளைகள் போல இருக்கக்கூடிய தத்துவச் சிறப்புக்களை எடுத்துக்கொண்டு நம் ஆன்மிக வாழ்வியலில் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவர்களுக்கு நஞ்சை நிலத்தையும் அசுரர்களுக்கு புஞ்சை நிலத்தையும் குறியீடாகச் சொன்னோம் அல்லவா. இப்பொழுது இந்தக் கதையைப் பாருங்கள்.
நஞ்சை நிலத்தை புஞ்சை நிலம் ஆக்கியவன் இந்திரன் மகன் ஜெயந்தன் என்ற காகாசுரன். அவன் தேவனாக இருந்தாலும், கெட்ட எண்ணத்தால், சீதையை அடைய நினைத்தான். அதற்காக அவன் காக வடிவம் எடுத்து, சீதையின் மேனியைத்தீண்டினான்.
அதனால், ராமனின் பிரம்மாஸ்திரத்தால் அடிபட்டு கண்ணை இழந்தான். எனவே, இன்றளவும் அவன் காகாசுரன் என்று அழைக்கப்படுகின்றான்.
சித்திரக்கூடத்திருப்ப
சிறுகாக்கை முலைதீண்ட
மூவுலகும் திரிந்தோடி,
‘வித்தகனே! இராமா!
ஓ! நின் அபயம்’ என்ன,
அத்திரமே அதன்
கண்ணை அறுத்ததுவும்
– என்று இந்நிகழ்வை பெரியாழ்வார் பாசுரம் விளக்கும்.
இன்னொரு உதாரணம் பாருங்கள். இவன் அரக்கர் குலத்தில் பிறந்தவன். ஆயினும் தன் நடத்தையாலும் எண்ணங்களாலும் பக்தியாலும் தேவனாக உயர்ந்தான்.
அவன்தான் இரண்யன் மகன் பிரகலாதன்.
முப்பது நாள் பாகவதம் சொன்னாலும் முடிவு இதுதான்.
நல்ல எண்ணங்கள் மனிதனை தேவனாக்கும்.
கெட்ட எண்ணங்கள் மனிதனை அசுரனாக்கும்.
இதைத்தான் வள்ளுவரும்,” “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50) என்றார்.
பாகவதம், விஷ்ணு புராணம் போன்ற சமய நூல்களின் நோக்கம், ஒவ்வொருவரும் பிரகலாதன் மற்றும் துருவன் போன்றவர்கள் நிலையை அடைவதுதான்.
நீங்கள் எந்த நிலையில் நிற்கிறீர்கள் என்று ஆன்மிகத்துக்கு முக்கியமல்ல.
நீங்கள் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள், எதை நோக்கி நகர்கிறீர்கள் என்பது முக்கியம்.
ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து சுகமாக வாழவே விரும்புகிறார்கள். ஆனால், அதற்கான தகுதியை பெற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். நிகழ்காலத்தில் தானும் நரகத்தில் வீழ்ந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் நரகத்தில் தள்ளிவிடும் செயல்கள் மற்றும் எண்ணங்களின் மூலம் எப்படி சொர்க்கத்தில் ஏற முடியும்?
இங்கே நரகம் என்பது துக்கம்.
சொர்க்கம் என்பது சந்தோஷம்.
துக்கத்திற்கு உரிய செயல்களைச் செய்துவிட்டு சந்தோஷத்தை அடைய முடியாது.
ஏகாதசி விரதம் இருக்கிறோம். சிவராத்திரி விரதம் இருக்கிறோம். கொலைப் பட்டினி கிடந்து கோயில் கோயிலாக நடக்கிறோம். கையைத் தட்டி பஜனை பாடுகிறோம்.
இவைகள் எல்லாம் சமயங்கள் காட்டும் அற்புதமான வழிகள்.
ஆனால், ஏகாதசியின் நோக்கம் பட்டினி கிடப்பதில்லை; இறைவனை அறிவது (உபவாசம் – இறைவன் அருகே வசித்தல் இறைவனை உணர்தல்)
இறைவன் என்பது சந்தோஷம் ஆனந்தம்.
ஏகாதசி விரதத்தால் இரண்டு நன்மை உண்டு.
1. ஆரோக்கியம் மேம்படும். “லங்கணம் பரம ஒளஷதம்” என்று பழமொழியே உண்டு.
ஆனால், ஏகாதசி விரதம் முடிந்து பாரணை செய்யும் பொழுது அதாவது விரதம் முடியும்போது உங்களுக்குப் பிடிக்காத ஏதாவது ஒரு சிறு தவறு நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோபப்பட்டு கடுமையாக நடந்து கொள்வதும், இரக்கமில்லாமல் மற்றவர்களிடம் நடந்து கொள்வதும் ஏகாதசி விரதத்தால் பெற்ற நன்மையை, குறைத்து விடும் அல்லது முற்றிலுமாக அழித்துவிடும்.
பட்டினியால் உங்கள் உடல் பெற்ற நன்மையை, ஒரு நிமிட கோபத்தால் உங்கள் உடலில் சுரக்க கூடாத விஷ நீர்கள் சுரந்து ஆரோக்கியத்தைக் கெடுத்து விடும்.
கோபப்படும் சூழ்நிலையில் கோபப்படாத நிதானத்தைக் கொண்டிருந்தால், கோயில் வழிபாடும் கேட்ட ஆன்மிக புராணக் கதைகளும் ஏகாதசி விரதமும் வேலை செய்கிறது என்று பொருள்.
சமயச் சடங்குகள் என்கிற படிகளின் மூலம் ஆன்மிக உயரத்தை நோக்கி நடக்கிறீர்கள் என்று பொருள்.

Tags :
× RELATED அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்