×

வரும் 31-ஆம் தேதி முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு

கறிகோழிக்கு தீவனக் கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாததைக் கண்டித்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் வருகிற 31 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோழி எடை மோசடியை தடுக்கக்கோரி தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கடையடைப்பு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும் எனவும் கறிக்கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்கும் நடைமுறையை கோழி உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை கருத்தில் கொண்டு, விற்பனைக்காக அனுப்பும் கறி கோழிகளுக்கு 15 மணி நேரத்துக்கு முன்னரே தீவனம் வழங்கும் நெறிமுறையை அவசியம் உற்பத்தியாளர்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கையை ஏற்காததை கண்டித்து ஒரு வார காலத்துக்கு கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று தஞ்சாவூரில் கூடியது. இதில் தீவனக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோரி வருகிற 31 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனை செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணையிலிருந்து கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன், அரசு விதித்துள்ள தீவனக் கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், ஆதாயத்திற்காக அதிக தீவனங்களை கோழிகளுக்குக் கொடுப்பதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

அதிக தீவனங்கள் கோழியின் கழுத்து மற்றும் வயிற்றில் 100 கிராம் அளவில் தேக்கி வைத்துக் கொள்வதால், கோழி விற்பனைக்கு வரும்போது வழியில் கழிவுகளாக வெளியேறி சுற்றுப்புறத்தைப் பாதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் ஆபத்தும் தேவையில்லாமல் இருக்கிறது. ஆகவே இந்த தீவனம் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்பதை ஒரு கட்டாய வழிகாட்டு நெறிமுறையாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இதனை சட்டமாகவும் மாற்ற வேண்டுமென கோழி வணிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஒருவேளை இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒரு வார காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கோழி விற்பனையை முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோழி ஏற்றும் தொழிலாளர்களுக்கும் கேடு விளைவிக்கிறது எனவும் அவர்கள் புகார் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கோழி இறைச்சி விற்பனையை நிறுத்தத்தால் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக வரும் நாட்களில் கோழி இறைச்சி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tamil Nadu Poultry Traders Association ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED தேர்வு நடைமுறைகளை வலுப்படுத்தும்...