×

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்; முதல்முறையாக மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி: மாணவர்கள் ஏற்க மறுப்பு; போராட்டம் தொடரும் என அறிவிப்பு

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி முதல்முறையாக மவுனம் கலைத்து அறிவித்துள்ளார். ஆனால், மாணவர்கள் இதை ஏற்கவில்லை. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: நம் இளைஞர்களின் நலனையும், எதிர்காலத்தையும் விட முக்கியமானது வேறெதுவும் இல்லை. அதுவே எங்கள் அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையான விஷயம். இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளில் விரைவான மற்றும் கடுமையான தண்டனை வழங்குவதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இது மாணவர்களின் நலனை பாதுகாக்க அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளில் முக்கியமான அம்சமாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன், தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் சார்ந்த பிரச்னை அல்ல, தேசிய நலன் சார்ந்த விஷயம் என்பதால், ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

அதே சமயம், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு நடந்தும் ஒரு குற்றவாளி கூட கைது செய்யப்படவில்லை என குற்றம்சாட்டிய நிலையில், விரைவு நீதிமன்றம் மூலம் நீதி வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை போராட்டத்துக்கான தீர்வாக மாணவர்கள் அமைப்பினர் எடுத்துக்கொள்ளவில்லை. விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற மோடியின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்துள்ள காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி), ‘‘தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’’ என்று ஒரு வரியில் பதிலளித்து விட்டு, தங்களது போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,Union Education Minister ,Dharmendra Pradhan ,
× RELATED 17 மாணவிகளின் போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த மாணவர் கைது