×

பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கவில்லை: படிக்க முடியாமல் அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகியும் பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 55,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 1.15 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) இறுதித் தேர்வுகள் முடிந்ததும் ஏப்.17ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆன பிறகும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் பல மாணவர்களுக்கு இன்னும் சில பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில், பாதி மாணவர்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் கிடைத்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதுவும் ஒன்று முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளித் தலைவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வகுப்புகள் தொடங்கி ஒரு மாதம் ஆகியும், மாநிலம் முழுவதும் உள்ள பல அரசுப் பள்ளிகளுக்கு, குறிப்பாக 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்ட ஒன்றாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடங்களைத் திட்டமிட உதவ வேண்டிய கையேடும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று பல ஆசிரியர்களும் கூறுகின்றனர். தவெக அரசு பதவி ஏற்று 50 நாளை கடந்து விட்டது. மே 10ம் தேதி பதவி ஏற்பு நடந்தது.

அப்போதே கல்வி அமைச்சராக ராஜ்மோகன் பதவி ஏற்று விட்டார். ஆனால் அவர் மற்ற துறைகள் குறித்த கேள்விகளுக்கெல்லாம் பட்டிமன்றத்தில் பதில் சொல்வதுபோல பதில் சொல்கிறார். ஆனால் சொந்த துறையில் இதுவரை மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்காதது குறித்து அவர் நேரடியாக எந்த பதிலையும் கூறாமல் உள்ளார். அதேநேரத்தில் படபுத்தகங்கள் வழங்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கல்வியாளர்களிடம் இருந்து குற்றச்சாட்டுகள் வரத் தொடங்கியுள்ளன.

மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையின் தாய் ஒருவர் கூறுகையில்:
எங்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்புத்தகங்கள் கிடைத்தன, ஆனால் மற்ற பாடங்களுக்கானவை கிடைக்கவில்லை. என் குழந்தை பாடவேளைகளில் குறிப்புகள் எடுத்து அவற்றைப் பயன்படுத்திப் படிக்கிறாள், ஆனால் அவள் படிப்பது சரியா என்பதைச் சரிபார்க்க எங்களுக்கு வழியில்லை,” என்று அவர் கூறினார். பாடப்புத்தகங்களின் பிடிஎப் பதிப்புகள் கிடைக்கின்றனவா என்பதும் தங்களுக்குத் தெரியாது என்று பெற்றோர்களும் தெரிவித்தனர்.

அதேபோல், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், கடந்த 4ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘வணக்கம், நான், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறேன். என்னை போன்ற சில மாணவர்களுக்கு, இன்னும் புத்தகம் வழங்கவில்லை. ஆசிரியரிடம் கேட்டால், ‘அக்கம் பக்கத்தினரிடம் வாங்கி படி’ என்கின்றனர். புத்தகம் இல்லாமல் படிப்பதற்கு சிரமமாக உள்ளது. புத்தகம் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என, தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை மற்ற மாணவர்களின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து, பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஷ்வரனிடம் கேட்ட போது, “கடந்தாண்டு, 8ம் வகுப்பில், 33 மாணவர்கள் படித்தனர். இந்தாண்டு, 44 பேர் படிக்கின்றனர். 33 மாணவர்களுக்கு, அரசு புத்தகம் வழங்கி உள்ளது. அதை வாங்கி மாணவர்களுக்கு வழங்கி உள்ளோம். வீடியோ வெளியிட்ட மாணவர், ஆங்கில வழிக்கல்வி மாணவர். அவருக்கு, புத்தகம் வழங்கி விட்டோம். மீதமுள்ள மாணவர்களுக்கு, வரும், 10ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்கிவிடுவோம்,” என்றார்.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்பட்டுள்ள சிரமங்களை பார்க்கையில், அரசுப் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பாடப்புத்தகங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பல பள்ளிகளில் முழுமையாக பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாடப்புத்தகங்கள் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவர்கள் கல்வி கற்பதில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது எடுக்கும் குறிப்பை வைத்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்கு பல கல்வியாளர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எல்லாருக்கும் எல்லாமே சென்று சேர்கிறதா என முதலமைச்சர் பார்க்க சொல்லி இருக்கிறார். ஏதேனும் சிறு தவறுகள் நடந்தாலும் அதில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் கூறி இருந்தார். அவ்வாறு கூறியவருக்கு அரசுப்பள்ளி மாணவர்களில் கதறல் கேட்கவில்லை போல என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags : Chennai ,Tamil Nadu ,Assisted ,
× RELATED பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள்...