* பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்; மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க அரசு நினைக்கிறதா என்றும் கேள்வி
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவுக்கு ஐந்து பேரை நியமிக்கும் தவெக அரசின் முடிவுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் விருப்பத்துக்கு ஏற்ப யுஜிசி உறுப்பினரை சேர்ப்பதை ஏற்க முடியாது. இதன்மூலம் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாடு முழுமையாக ஒன்றிய அரசுக்கு சென்றுவிடும். போராடி காப்பாற்றி வந்துள்ள மாநில உரிமையை விட்டுக்கொடுக்க அரசு தயாராக இருக்கிறதா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலை, மதுரை காமராஜர், அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், பெரியார், வேளாண் பல்கலை, சட்டப் பல்கலைக்கழகம், திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், கால்நடை, உடற்கல்வியியல் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக பல்கலைக்கழக பணிகளில் தொய்வு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் கமிட்டி ஒன்று செயல்படுகிறது.
இந்தக் கமிட்டியை பல்கலைக்கழக சிண்டிகேட் குழு முடிவு செய்கிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக உயர் கல்வித்துறை செயலர், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். மற்ற இருவரும் சிண்டிகேட் குழுவில் இருந்து தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் உள்ளனர். எந்தப் பணியாக இருந்தாலும் மூன்று பேரும் சேர்ந்து கையொப்பமிட வேண்டும். இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.
துணைவேந்தர் இருந்தால் புதிய கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது, புதிய படிப்புகளுக்கு அனுமதி அளிப்பது, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் சம்பளத்தில் கையெழுத்திடுவது உள்பட அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டும். துணைவேந்தர் இல்லாததால் ஆசிரியர், மாணவர், ஆசிரியர் அல்லாத ஊழியர் என அனைவரின் நலன்களும் பாதிக்கப்படுவதோடு, இணைப்புக் கல்லூரிகளுக்கு பாடப் புத்தகங்கள், தேர்வு ஆகிய பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பழி வாங்குவதும், உரிய தொகைகளை வழங்காமல் இழுத்து அடிப்பதுமே ஒன்றிய அரசின் முக்கிய கடமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசு பாஜவின் பல்வேறு அநீதி செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. அதில் ஒன்றுதான் துணைவேந்தர் நியமனம். மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நாங்களே நியமித்துக்கொள்கிறோம். யுஜிசியின் பிரதிநிதி தேவையில்லை என கூறியது.
அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு திமுக அரசால் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் மாநில அரசால் நடத்தப்படும் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ‘வேந்தர்’ என்ற இடத்தில் ‘அரசு’ என மாற்றம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பினார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. வழக்கின் முடிவில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் வந்தது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு இடைக்கால தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்ஷி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வு விசாரித்தது. சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக, மாநில அரசுக்குப் போதுமான வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, தலைமை நீதிபதி அமர்வு அல்லது பொருத்தமான அமர்வில் பட்டியலிடப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், ‘சம்பந்தப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்க வேண்டும்’ என உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் முடிவு வெளியில் வரும் வரை எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படக் கூடாது என உத்தரவிட விரும்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ‘‘அதுவரை எந்த நியமனங்களையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை’’ எனத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான முக்கிய வழக்கின் இறுதி விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தால் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்று நபர் கமிட்டியாக இருந்த துணை வேந்தர் நியமன குழு 5 நபர் குழுவாக விரைவில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ‘‘தமிழ்நாட்டில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு ஏற்கனவே ஆளுநரின் உறுப்பினர் தலைவராகவும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர், அரசின் உறுப்பினர் என மூன்று பேர் நியமனம் செய்து வந்தோம்.
முன்னாள் ஆளுநர் ஆர்.என் ரவி பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினர் ஒருவரையும் சேர்த்து துணைவேந்தர் நியமனத் தேர்தல் குழு அமைக்க வேண்டுமென கூறினார். அது நிலுவையில் இருந்தது. தற்போது அரசின் சார்பில் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரை துணைவேந்தர் தேர்தல் குழுவில் நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அனேகமாக ஆளுநர் அதற்கு இசைவு கொடுத்ததாக கருதுகிறேன்.
மூன்று நபர் கமிட்டியாக இருந்த துணை வேந்தர் நியமன குழு 5 நபர் குழுவாக விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்கிற ஒரு செய்தி எங்களுக்கு வந்த வண்ணம் இருக்கிறது. ஐந்து நபர் கமிட்டியாக அமைக்கப்பட்டவுடன் துணைவேந்தர் நியமனம் நடக்கும்’’ என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருந்தார். தவெக அரசின் இந்த முடிவுக்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் விருப்பத்துக்கு ஏற்ப யுஜிசி உறுபபினர்களை சேர்ப்பதை ஏற்க முடியாது, பல்கலைக்கழக கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒன்றிய அரசிடம் சென்றுவிடும், மாநில அரசின் உரிமையை விட்டுக்கொடுப்பதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சட்டவிரோதம்: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தேடல் குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமிப்பது சட்டவிரோதம், அரசின் அதிகாரத்தை அடகு வைக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இது போகக் கூடாத ஊருக்கு வழி காட்டும் செயல் என்பது மட்டுமின்றி, துணை வேந்தர்கள் நியமன நடைமுறையை மேலும் சிக்கலாக்கும் செயல் ஆகும். இப்போதைய சிக்கல் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா, செல்லாதா என்பது தான். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் இறுதி விசாரணை வரும் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.
அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதால், அத்துடன் இந்த சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டு விடும். இத்தகைய சூழலில் இந்த விவகாரத்தை இரு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு இழுத்துச் சென்று, எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்? அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழக பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்க பல்கலைக்கழக சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினரையோ, வேறு உறுப்பினரையோ சேர்ப்பது சட்டவிரோதம். அதை அனுமதிக்க முடியாது.
கடந்த திமுக ஆட்சியில் இது தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கு மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தான் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அரசின் விருப்பப்படியே 3 உறுப்பினர்கள் கொண்ட குழு வாயிலாக துணை வேந்தர்களை நியமிக்கலாம்; தீர்ப்பு எதிராக வந்தால் மாற்று ஏற்பாடுகள் குறித்து பின்னர் யோசிக்கலாம். அதற்கு முன்பாக இதுகுறித்து பேசுவதே நீதிமன்ற விசாரணையில் குறுக்கிடுவது ஆகும்.
துணை வேந்தர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்தப்பட்டால், அது பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரானது என்று கூறி நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படும். அந்த வழக்குகளை விசாரித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்க முடியாது.
தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மொத்தமுள்ள 22 பல்கலைக்கழகங்களில் 16 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. அவை அனைத்தும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதைப் போல இந்த சிக்கலுக்கு விரையில் சட்டத் தீர்வு கிடைக்கவுள்ள நிலையில், புதிய சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது.
எனவே, துணைவேந்தர்கள் தேடல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தும் திட்டத்தை தவெக அரசு கைவிட வேண்டும். மாறாக, வரும் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள வழக்கை திறம்பட நடத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசின் உரிமைகளை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுஜிசி உறுப்பினர்களை இணைப்பதா…: திமுக எம்பி பி.வில்சன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய பாஜ அரசிடம் மண்டியிட்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது தவெக அரசு. உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை 3 லிருந்து 5 ஆக உயர்த்தப் போவதாகத் தெரிவித்திருந்தார். இது முற்றிலும் மாநில உரிமைக்கு எதிரானது.
பல்கலைக்கழகங்களை செங்கல், சிமென்ட் வைத்து கட்டுவதோடு ஒரு மாநில அரசினுடைய அதிகாரம் முடிவடையாது. அந்த பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என அனைவரையும் நியமிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 1949ல் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் போது ஒன்றிய அரசிற்கு டிட்டர்மினேஷன் ஆப் எஜுகேஷன், ஸ்டாண்டர்ட் ஆப் எஜுகேஷன் சம்பந்தமாக மட்டும் தான் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் கூறி இருப்பார்.
அதை மீறி 2018ல் கொண்டுவரப்பட்ட யுஜிசி ரெகுலேஷன் 7.3ன் மூலம் துணை வேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என கூறப்பட்டது. அதை அப்போதைய அரசு ஏற்க மறுத்து அதற்கு எதிராக ஒரு அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் 3 பேர் அடங்கிய குழுவில் ஒருவரை ஆளுநர் நியமிப்பார், ஒருவரை அரசு நியமிக்கும், ஒருவரை பல்கலைக்கழக சிண்டிகேட் நியமிக்கும். ஆனால் இந்த முறையை கடந்த ஆட்சியின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுத்த மறுத்து துணைவேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருந்தார்.
ஆளுநருக்கு எதிராகவும், விதி 7.3 க்கு எதிராகவும் திமுக அரசு சார்பில் வழக்கு போடப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல், துணைவேந்தர் நியமனத்தை முதல்வரே மேற்கொள்ளும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தோம். அந்த சட்ட திருத்தத்தோடு 10 மசோதாக்களை ஏற்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி கொண்டு இருந்ததால் உச்சநீதிமன்றம் மூலம் அந்த 10 பில்களை சட்டமாக்கினோம். அது இந்தியாவே திரும்பி பார்க்கிற அளவிற்கு கவர்னரின் அதிகாரத்தை வரைமுறைபடுத்தி உச்ச நீதிமன்றம் ஒரு சட்டமாக வெளியிட்டது.
ஆனால் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர், 5 நாமினியில் கவர்னர் பரிந்துரைக்கும் 2 நாமினின்னு சொல்கிறார். இன்னொரு நாமினி யார் என்று அவர் மறைமுகமாக யுஜிசி நாமினியை கூறுகிறார். இந்த அரசு ஒன்றிய அரசுக்கு மண்டியிட பார்க்கிறார்களா? இல்லை கவர்னரின் அதிகாரம் பறிக்கப்பட கூடாது என நினைக்கிறார்களா? எதற்காக முதல்வருக்கு இருக்க வேண்டிய அதிகாரத்தை எடுத்து கவர்னருக்கு கொடுக்க வேண்டும். அதேபோல ஒன்றிய அரசு சொல்லும்படி யூஜிசியின் நாமினியை இதில் சேர்ப்பது மூலம் ஒன்றிய பாஜ அரசிடம் மண்டியிட்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது இந்த அரசு.
மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுக்க சொல்லி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கிரஸின் ராகுல் காந்தி வலியுறுத்தினாரா?. இது நம்முடைய மாநில உரிமை. இதை விட்டு விடக்கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக மாநில உரிமைக்காக உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாங்கள் வென்று வந்திருக்கிறோம். அதற்கு மாறாக யுஜிசி உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது மூலம் நமது பல்கலைக் கழகங்களின் அதிகாரம் ஒன்றிய அரசு வசம் போய்விடும்.
கடந்த எங்களது ஆட்சியில் கூட இவர்கள் சொல்வதை போல 5 நபர்களை குழுவில் வைத்துக் கொண்டு துணை வேந்தர்களை நியமித்து இருக்கலாம். ஆனால் மாநில உரிமையை விட்டுக் கொடுப்பது என்பது நம் மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது போல. எனவே எக்காலத்திலும் இந்த யுஜிசியின் நாமினியை செலக்ஷன் பேனலில் சேர்க்கவே கூடாது. சேர்த்தால் அரசியலமைப்பு சட்டம் கொடுத்த மாநில உரிமை, அண்ணல் அம்பேத்கர் மாநில மக்களுக்கு கொடுத்த உரிமை, நாம் இதுவரை போராடி காப்பாற்றி வந்துள்ள உரிமையை நாமே விட்டு கொடுப்பது போல ஆகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
* இப்போதைய சிக்கல் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுமா, செல்லாதா என்பது தான். இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை 29ம் தேதி ஐகோர்ட்டில் தொடங்கவுள்ளது. அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை இரு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு இழுத்துச் சென்று, எல்லா அதிகாரங்களையும் ஆளுநரிடம் ஒப்படைக்க அரசு துடிப்பது ஏன்?
