×

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக புகார்; செந்தில் பாலாஜியின் சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு: காவல்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், ஆளும் தவெக கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது தாங்கள் சொல்லும்படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் வரை தருவதாக பேரம் பேசியதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், முதல் தகவல் அறிக்கையில் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், ஆஜராகி, இந்த மனு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும். வரும் திங்கட்கிழமை பதில் அளிப்பதாக தெரிவித்தார். அசோக் குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அதுவரை கைது நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட கூடாது என்று கோரினார். ஆனால், அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, அசோக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவுக்கு பதில் தருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

Tags : Thaveka MLA ,Senthil Balaji ,Chennai ,Uthankarai ,Assembly ,Thaveka ,
× RELATED தானியங்கி பட்டா மாறுதல் – 15 நாட்களில்...