- திமுகா மாஜி அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- விஜய்
- சட்டமன்ற உறுப்பினர்
- தூத்துக்குடி
- முன்னாள் அமைச்சர்
- எபெருராத்ஷி
- Atur
தூத்துக்குடி: முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக கூறி திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று கைது செய்யப்பட்டார். ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ேபரூராட்சி அலுவலக பணிகளை ஆய்வு செய்தபோது அவரை வழிமறித்து போலீசார் இழுத்து சென்றனர். தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தனி அறையில் அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் சேரும்படி போலீசார் மிரட்டியதாக அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகிக்கிறார். கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த ஜூன் 20ம் தேதி ஆத்தூரில் நடந்த கலைஞர் பிறந்த நாள் விழா திமுக பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். அரசியலமைப்பு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் அடிப்படையில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் நகர தவெக செயலாளர் செல்வமுருகன், போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில், ‘‘முதல்வர் விஜய்யை, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஒருமையில் பேசியதாக வழக்குபதிவு செய்த ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்தார். பின்னர் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த ஆத்தூர் பேரூராட்சி அலுவலக பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு காலை 11.50 மணிக்கு ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் தலைமையில் புகுந்த போலீசார், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவை கைது செய்வதாக தெரிவித்தனர். முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசிய குற்றச்சாட்டில் கைது செய்வதாகவும் கூறினர்.
பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன், தனது வக்கீல் வந்ததும் வருகிறேன் எனக் கூறி அவரது காரில் ஏறினார். ஆனால் இன்ஸ்பெக்டர் ரென்னிஸ், அப்படி முடியாது. போலீஸ் ஜீப்பில் ஏறுமாறு வற்புறுத்தினார். பின்னர் அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இழுத்துச் சென்று போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அவரை கைது செய்வதற்கு அங்கு கூடியிருந்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை கைது செய்யக்கூடாது என்று கோஷமிட்டு போலீஸ் ஜீப் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அனிதா ராதாகிருஷ்ணனிடம் மதியம் 12.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை எஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் ஏடிஎஸ்பி தீபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்பி அலுவலக 2வது மாடியில் உள்ள தனி அறையில் வைத்து இந்த விசாரணை நடந்தது. இதையொட்டி எஸ்பி அலுவலகத்தின் இரு வாயில்களும் மூடப்பட்டன. அனைவரும் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்து தகவலறிந்ததும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலரும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திரண்டனர். ஆனால், எஸ்பி அலுவலகத்துக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் கலெக்டர் அலுவலக பிரதான சாலையிலேயே போலீசார் குவிக்கப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்து தகவலறிந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் விளாத்திகுளம் மார்க்கண்டேயன், பாளையங்கோட்டை அப்துல் வஹாப், தென்காசி மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன், திமுக நிர்வாகி அஜிதா ஆக்னல் உள்ளிட்டோர் எஸ்பி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். எஸ்பி அலுவலக வாசல் முன்பு திமுகவினர் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை விலகிச்சென்று நிற்குமாறு தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சுதிர் வலியுறுத்தினார். இதற்கு தென்காசி மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவபத்மநாபன் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிவபத்மநாபன் உள்ளிட்ட 10 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரதரவென இழுத்து சென்று கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து ரூரல் டிஎஸ்பி சுதிர் தலைமையிலான போலீசார், எஸ்பி அலுவலக வளாகத்தில் திரண்டிருந்தவர்களை வெளியேறிச் செல்லுங்கள். இல்லையென்றால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல என்று கூறியதையடுத்து பெண்கள் வெளியேறினர்.
தொடர்ந்து எஸ்பி அலுவலக வளாகத்தின் இருபுறமும் பேரிகார்டு கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.30 மணிக்கு அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணையை முடித்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் ஜீப்பில் கொண்டு வந்து ஏற்றினர். அப்போது போலீஸ் ஜீப்பில் இருந்த படியே நிருபர்களுக்கு பேட்டியளித்த அனிதா ராதாகிருஷ்ணன், ‘‘என்னை கைது செய்து அழைத்துச் சென்று எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யுமாறு போலீசார் கட்டாயப்படுத்தினர். அது நடக்காது. எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம்.
உடனடியாக தவெகவில் இணையுமாறு போலீசார் கட்டாயப்படுத்தினர். ஒரு கொம்பனாலும் என்னை தொட்டுப் பார்க்க முடியாது. நான் தவறு செய்யவில்லை. தவறு செய்யாத என்னை பொய் வழக்கு போட்டு ஒரு காலமும் அடக்க முடியாது. எந்த மிரட்டலுக்கும் அடி பணிய மாட்டோம். 10ம் தேதி ஆத்தூர் போலீசில் ஆஜராவதாக கடிதம் கொடுத்துள்ளேன். அதற்குள் என்னை கைது செய்துள்ளனர். நான் மு.க.ஸ்டாலின் வழி நடப்பேன், திமுகவில் தான் நீடிப்பேன். என்ன விலைக்கு வாங்க முடியாது. நான் ஒருபோதும் ராஜினாமா செய்ய மாட்டேன்’’ என ஆவேசமாக பேட்டியளித்தார்.
அப்போது எஸ்பி அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் போலீசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 9.40 மணி வரை மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதன்பின்னர் இரவு 9.45 மணி அளவில் அவர், போலீசார் பலத்த பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் இருந்து திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தை தொடர்ந்து , அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஏரளாமானோர் கார் உள்ளிட்ட வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர். முன்னதாக அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்செந்தூரில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 மாதத்துக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘திமுக தலைவர் ஸ்டாலின் தைரியமாக இருக்க சொல்லி இருக்கிறார். எதற்கும் அச்சப்படமாட்டேன். உடனடியாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தால் தான் பயப்படுவார் என கூறியதாலேயே இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரால் (தவெக எம்எல்ஏ சரவணன்) லாட்டரி சீட்டு வியாபாரமும், கஞ்சா வியாபாரமும் நடக்கிறது. அதை தட்டிக் கேட்க இந்த அரசிற்கு திராணி இல்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மீது ஆணையாக சொல்கிறேன். தவெக குதிரை பேரம் எங்களிடம் நடக்காது. இன்னும் ஆறு மாத காலத்தில் இந்த ஆட்சி இருக்காது என்பதை நான் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்’ என்றார்.
நிருபர்களுடன் டிஎஸ்பி கடும் வாக்குவாதம்
அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் விசாரணை நடந்த எஸ்பி அலுவலகத்தின் முன்பு பத்திரிகையாளர்கள் திரண்டு நின்றனர். அவர்களையும் ரூரல் டிஎஸ்பி சுதிர், தூரமாக சென்று நில்லுங்கள், அலுவலக முகப்பு முன்பு வர வேண்டாம், என்றார். இதற்கு மறுத்த பத்திரிகையாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
4 பேர் கொண்ட குழு மருத்துவ பரிசோதனை
கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ உடல்நிலை பாதிக்கப்பட்டவர். எனவே, மருத்துவரை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி திமுக வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடும்ப மருத்துவர், அவரது மகன் மற்றும் ஒரு வக்கீல் ஆகியோரை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு மருத்துவர் ராஜவேல் முருகன் தலைமையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் எஸ்பி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
பேட்டி தர விடாமல் தடுத்த போலீசார்
போலீசார் எஸ்பி அலுவலகத்தில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணனை வெளியே அழைத்து வந்தபோது அவர் கூடியிருந்த பத்திரிகை மற்றும் மீடியாக்களிடம் பேட்டியளிக்க முயன்றார். அப்போது போலீசார் அவரையும், பத்திரிகையாளர்களையும் தடுத்தனர். தொடர்ந்து அவரை போலீசார் தள்ளிச்சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.
தேச துரோக குற்றவாளியா?
ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கினை பொறுத்தவரையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவர் பேசியது எல்லாம் வீடியோ பதிவில் உள்ளது. அவர் நேற்று காலையில் கைது செய்யப்பட்ட பின், வழக்கமான நடைமுறைக்கு பின்னர் உடனடியாக கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தாமல், தேச துரோக குற்றவாளியை போல அவரை நடத்தி, அவரிடம் 6 மணி நேரத்திற்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன?. இது முழுக்க முழுக்க தவெக அரசின் உத்தரவில், 7 முறை ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற மூத்த அரசியல்வாதிக்கு நடந்த அவமதிப்பு என வக்கீல்கள் தெரிவித்தனர்.
