×

சங்க நடவடிக்கையில் பங்கேற்க வாழ்நாள் தடை; பாலியல் புகாரில் சிக்கிய பயிற்சியாளர், மேலாளர் டிஸ்மிஸ்: மேகாலயா கிரிக்கெட் சங்கம் அதிரடி

ஷில்லாங்: மேகாலயா மாநில கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மற்றும் மேலாளர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் பயிற்சி முகாமில், வீராங்கனைகளுக்கு பயிற்சியாளர் மற்றும் மேலாளர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பல வீராங்கனைகள் முறையான புகார் அளித்ததைத் தொடர்ந்து, மேகாலயா கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ) ஒரு உள்விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்த விசாரணையில், பயிற்சியாளர் மற்றும் மேலாளர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது. கிரிக்கெட் மைதானங்களில் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் இருந்தவர்களே இத்தகைய செயலில் ஈடுபட்டது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவறு செய்த பயிற்சியாளர் மற்றும் மேலாளர் மீது வாழ்நாள் தடை விதித்து மேகாலயா கிரிக்கெட் சங்கம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயிற்சியாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் இனிமேல் மேகாலயா கிரிக்கெட் சங்கத்தின் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்க முடியாது. அவர்களுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்பான பணிகளிலும் ஈடுபட நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. எங்கள் வீராங்கனைகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Meghalaya Cricket Association ,Shillong ,Meghalaya State ,
× RELATED விம்பிள்டன் டென்னிஸ் ருப்லேவ் அதிர்ச்சி தோல்வி: ஜெஸ்ஸிகா முன்னேற்றம்