லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், ரஷ்ய நட்சத்திரம் ஆந்த்ரே ருப்லேவ் அதிர்ச்சி தோல்வி கண்டார்.முதல் சுற்றில் சக ரஷ்ய வீரர் ரோமன் சபியுலின் உடன் நேற்று மோதிய ருப்லேவ் (12வது ரேங்க்) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாடிய அவர் 7-6 (8-6), 6-3 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி 1-2 என முன்னிலை பெற்றார்.எனினும், கடும் நெருக்கடி கொடுத்த சபியுலின் 6-3, 7-6 (14-12) என கடைசி 2 செட்களையும் கைப்பற்றி 3-2 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். 5 செட்களுக்கு இழுபறியாக நீடித்த இப்போட்டி 3 மணி நேரம் 58 நிமிடத்துக்கு நடந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் விடமனோவாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் மிகா ஸ்டோஜ்சயேவிச்சை மிக எளிதாக வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 5 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.
