இந்த ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா துறை வர்த்தக ரீதியாக எப்படி இருந்தது என்பது குறித்த அலசல்தான் இந்த கட்டுரை.
தெலுங்கு சினிமா: இந்த ஆண்டின் முதல் பாதியில் பான்-இந்திய அளவிலும் பிராந்திய அளவிலும் பெரிய படங்களை களமிறக்கியது.மொத்த வருவாய் ரூ.1,185 கோடி வசூலித்து இந்திய அளவில் இந்த ஆண்டில் இரண்டாவது பெரிய சந்தையாக டோலிவுட் திகழ்கிறது. முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மற்றும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காரணமாக ஒட்டுமொத்த பட்ஜெட் செலவு தோராயமாக ரூ.1,000 கோடி முதல் ரூ.1,200 கோடி வரை இருந்தது.
ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் ரூ.340 கோடி வசூலித்து முதலிடம் பிடித்தது, ஆந்திரா/தெலங்கானாவில் லாபம் தந்தாலும் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டவில்லை. சிரஞ்சீவியின் ‘மன சங்கர வரபிரசாத் காரு’ நல்ல வசூலைப் பெற்றது. ஆனால் பிரபாஸின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான ‘தி ராஜா சாப்’ ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.208 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
மலையாள சினிமா: 2025யை தொடர்ந்து 2026-ன் முதல் பாதியிலும் மலையாளத் திரைத்துறை மிகக் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டும் துறையாகத் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. மலையாளத் திரைப்படங்களின் மிக முக்கிய பலமே குறைவான பட்ஜெட் ஆகும். இந்த 6 மாதங்களில் வெளியான அனைத்துப் படங்களின் ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவு வெறும் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடிக்குள்ளேயே அடங்கும்.
வெளியான பல படங்கள் மிகக் குறைந்த முதலீட்டில் 5 முதல் 10 மடங்கு வரை லாபம் பார்த்துள்ளன. மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் உலகளவில் ரூ.241 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதேபோல, ‘வாழ 2’ திரைப்படமும் சுமார் ரூ.234 கோடி வசூலித்து மலையாளத் துறைக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
கன்னட சினிமா: கடந்த சில வருடங்களாகவே ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பிறகு, கன்னடத் திரைத்துறை சரியான கதைகள் மற்றும் பெரிய வெற்றிகள் இல்லாமல் தவித்து வருகிறது. முதல் 6 மாதங்களில் ஒட்டுமொத்தமாக வெறும் ரூ.84 கோடி மட்டுமே கன்னட சினிமா வசூலித்துள்ளது. நடுத்தர மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் என அனைத்தும் சேர்த்து சுமார் ரூ.150 கோடி முதல் ரூ.180 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் தியேட்டர்களில் பார்வையாளர்களின் வருகை கன்னடப் படங்களுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் முதலீடு செய்த தொகையில் பாதி கூட திரும்பக் கிடைக்காததால் கன்னடத் திரைத்துறை இந்த ஆண்டின் முதல் பாதியில் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
