×

மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.60 கோடி சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

 

மதுரை: மதுரை மீனாட்சி கோயிலின் ரூ.60 கோடி சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கட்டளைக்காக பதியப்பட்ட, மதுரை அழகர்கோவில் ரோட்டில் சொக்கிகுளம் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பிலான அகோதவிலாஸ் பங்களா மற்றும் தோட்டம் உள்ளிட்ட 1.80 ஏக்கர் நிலத்தை வாடகையை தவிர வேறு வகையில் பயன்படுத்த முடியாது என உயிலில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலத்தை பட்டா மாற்றம் செய்து மோசடி செய்ததாக அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின்பேரில், மதுரை மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்திய வாரிசு சான்றிதழ் எவ்வாறு பெறப்பட்டது, அதை வழங்கிய அதிகாரிகள் யார், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. பதிவு தொடர்பான ஆவணங்கள், பட்டா, சிட்டா, பத்திரங்கள் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, 2023ம் ஆண்டு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழ் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது. இந்த மோசடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். தேவையான ஆவணங்களை வருவாய்த்துறையிடம் இருந்து பெற்று, அவற்றை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜாவை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் போலி ஆவணம் மூலம் பட்டா பெற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Tags : Meenakshi Temple ,Madurai ,Madurai Meenakshi Amman Temple Ordinance ,Madurai Ahagargo ,
× RELATED எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு...