×

எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி: நாளை முதல் பல ரயில்கள் தற்காலிக மாற்றம்

 

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.842 கோடி மதிப்பில் விரிவான மறுசீரமைப்பு பணிகளை, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் மேற்கொண்டு வருகிறது. பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து மையமாக நிலையத்தை மாற்றும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய வருகை மற்றும் புறப்பாட்டு முனையங்கள், விசாலமான பயணிகள் கூடங்கள், நவீன காத்திருப்பு அரங்குகள், மேம்படுத்தப்பட்ட பயணிகள் வசதிகள், மின்தூக்கிகள், எஸ்கலேட்டர்கள், மேம்பட்ட நிலைய உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 5 (நாளை) முதல் 30ம் தேதி வரை விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 5 முதல் 20ம் தேதி வரை 9 விரைவு ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் அல்லது மாம்பலம் நிலையங்களில் இருந்து புறப்படவோ அல்லது அங்கு நிறுத்தப்படவோ செய்யப்படும். அதன்படி, தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மங்களூரு – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் சேலம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மேலும், திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

அதேபோல், அகமதாபாத் – திருச்சிராப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும், திருச்சிராப்பள்ளி – அகமதாபாத் வாராந்திர சிறப்பு ரயில் ஆகஸ்ட் 9 மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது. மேலும், ஆகஸ்ட் 22 முதல் 30 வரை (வார நாட்களில்) இரவு நேரங்களில் இயக்கப்படும் 3 சென்னை கடற்கரை தாம்பரம் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும் 5 மின்சார ரயில்கள் தாம்பரம் சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் 5 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதுடன், 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டு இயக்கப்படும். இந்த அத்தியாவசிய உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறும், தற்காலிக மாற்றங்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Egmore Railway Station ,Chennai ,Chennai Division of Southern Railway ,Chennai Egmore Railway Station ,
× RELATED தமிழ்நாடு வந்தடைந்தது காவிரி நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி