விடுமுறை தினம் எதிரொலி சாத்தனூர் அணையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளது. இவற்றில் வாரந்தோறும் அதிக மக்கள் கூடும் இடமாக சாத்தனூர் அணை திகழ்கிறது. பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டது.

இதற்கிடையில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 100 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீட்மட்டம் 80 அடியாக குறைந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 88அடியாக உயர்ந்தது. இதைதொடர்ந்து திருவண்ணாமலை மாநகராட்சிக்கு குடிநீர், பூங்கா பராமரிப்பு பணி ஆகியவற்றிற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 86.55 அடியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. அதன்படி பிக்கப் அணைக்கட்டு பகுதியில் 19 மி.மீ. மழையும், தண்டராம்பட்டு பகுதியில் 16 மி.மீ. மழையும், வானாபுரம் பகுதியில் 14 மி.மீ. மழையும் பதிவானது.

அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சாத்தனூர் அணையில் சிறுவர் பூங்கா, டைனோசர் பார்க், அறிவியல் பார்க், படகு குளம், நீச்சல் குளம், வீரமங்கை பார்க், அறிவியல் பார்க், முயல் கூண்டு பறவைகள் கூண்டு 11 கண் மதகு, முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

இதனால் விடுமுறை நாட்களில் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.அதன்படி நேற்று வார விடுமுறைதினம் என்பதால் சாத்தனூர் அணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. மேலும் குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகள் சிறுவர் பூங்கா, டைனோசர் பார்க், அறிவியல் பார்க், படகு குளம், நீச்சல் குளம், வீரமங்கை பார்க், அறிவியல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் பொழுது போக்கி மகிழ்ந்தனர்.

Related Stories: