×

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்

*அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை

ரெட்டிச்சாவடி : வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளை பலப்படுத்தும் பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரம் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திலும், விழுப்புரம், திருக்கோவிலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி.மீ நீளத்திலும் பாய்ந்து, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இந்த தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர பகுதி முற்றிலும் சேதமானது. குறிப்பாக பெஞ்சல் புயலால் வட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக கரையோர பகுதிகளான அழகியநத்தம், இரண்டாயிரம் விளாகம், பெரிய கங்கணாங்குப்பம், வெளிச்செம்மண்டலம், கடலூர் மாநகராட்சி பகுதிகள், மஞ்சக்குப்பம், தாழங்குடா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதற்கிடையே வெள்ள தடுப்பு நிவாரணமாக ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கரையோரப் பகுதிகளை கருங்கல் மூலம் பலப்படுத்த தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள தடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளை பலப்படுத்தும் பணியை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Thenpennai river ,Reddychavadi ,South India ,Karnataka… ,
× RELATED கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி...