×

கட்டப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு குமரி எஸ்.பி. அலுவலக பழைய கட்டிடம் சீரமைக்கப்படுமா?

*கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் அச்சம்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலக பழைய கட்டிடம், பெயர்ந்து விழ தொடங்கி உள்ளது. எனவே கட்டிடத்தில் சீரமைப்பு பணி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பழைய கட்டிடம், புதிய கட்டிடம் என இரு பிரிவுகளாக உள்ளன. இரு கட்டிடங்களையும் இணைத்து இணைப்பு கட்டிடங்களாக இவை இயங்கி வருகின்றன.

இதில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் தான் திறக்கப்பட்டது. தரை தளம், முதல் தளம், 2ம் தளம், 3ம் தளம் என இவை செயல்படுகிறது. எஸ்.பி. அறை, தனிப்பிரிவு, மாவட்ட எஸ்.பி அலுவலக பிரிவுகள், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் புதிய இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

பழைய கட்டிடத்தில் எஸ்.பி. தனிப்பிரிவு, சைபர் க்ரைம், ஏடிஎஸ்பி (நிர்வாகம்), மாவட்ட குற்றப்பிரிவு 1, 2, பொதுமக்கள் கருத்து கேட்பு மையம் உள்ளிட்டவை இயங்குகின்றன. எஸ்.பி. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், எஸ்.பி. அலுவலகத்தில் நிர்வாக வசதிக்காக பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.

குறிப்பாக பொதுமக்கள் அமர்வு அறை, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிவறை வசதிகள், போலீசார் உணவருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளை எஸ்.பி. ஸ்டாலின் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தின் பழைய கட்டிடம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் வெளிப்புற கான்கிரீட் சுவர்கள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இந்த கட்டிடத்தை சீரமைத்து, வர்ணம் பூசப்பட வேண்டும் என ஏற்கனவே 2, 3 முறை தமிழ்நாடு காவல்துறை குடியிருப்பு கட்டுமான பிரிவு சார்பில் திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 2000 த்தில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகின்றன.

எனவே கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விரைவில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் எஸ்.பி. அலுவலக கட்டுமான பணிகளுக்கான நிதியும் பெறும் வகையில், எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டிரான்ஸ்பார்மரால் போக்குவரத்து நெரிசல்

* குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வாகன பார்க்கிங் வசதியும் கிடையாது. எஸ்.பி. அலுவலகத்தில் அருகில் உள்ள சமூக நல விடுதி வளாகத்தில் தான் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன. எஸ்.பி. அலுவலகத்துக்கு வெளியே டிரான்ஸ்பார்மரும் உள்ளது.

இதையொட்டி சில சமயங்களில் ஒரு சிலர் கார்களை பார்க்கிங் செய்து விட்டு சென்று விடுகிறார்கள். அந்த சமயங்களில் எஸ்.பி. அலுவலகத்துக்குள் வர வேண்டிய வாகனங்கள் வர முடியாமல் திணறுகின்றன.

* கடந்த சில தினங்களுக்கு முன் நீதித்துறை சார்ந்த இரு கார்கள் நீண்ட நேரமாக இந்த பகுதியில் நின்று, பெரும் நெருக்கடியை உண்டாக்கின. எனவே எஸ்.பி. அலுவலகத்துக்கு வெளியே உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

கலைஞர் திறந்து வைத்த கட்டிடம்

எஸ்.பி. அலுவலக பழைய கட்டிடத்துக்கு 18.8.1997 ல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அப்போதைய மாவட்ட கலெக்டர் விஸ்வநாத் ஷெகாவ்கர், எஸ்.பி. ஆபாஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் அடிக்கல் நாட்டி வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இந்த கட்டிட பணிகள் 2000ம் ஆண்டில் நிறைவு பெற்றது. கடந்த 2.10.2000ம் அன்று (காந்தி ஜெயந்தி அன்று) அப்போதைய முதலமைச்சர் மறைந்த கலைஞரால் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

Tags : Kumari S. B. ,Nagarko ,Nagarkov B. ,
× RELATED ஆர்வத்துடன் வாங்க குவியும் மக்கள்...