ஸ்பீக்கர்களை அலறவிடும் ஷேர் ஆட்டோக்களால் பயணிகள் அவதி: போலீசார் கவனிப்பார்களா?

 

தேவதானப்பட்டி, ஆக. 3: தேவதானப்பட்டி பகுதியில் அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர்களை ஒலிக்க செய்யும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. தேவதானப்பட்டி, காட்ரோடு, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, வைகைபுதூர், ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. இப்பகுதியில் உரிய சீருடை அணிந்து, போக்குவரத்து விதிமுறைகளை ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஒரு சில ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் விதிமுறைகளை மீறி பயணிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்திவருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட் அருகே, இரண்டு பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளை பொருத்தியுள்ளனர். அதிக பயணிகளை ஏற்றுவதற்கு அந்த ஸ்பீக்கர் பெட்டிகள் ஏதுவாக உள்ளது. மேலும் அந்த ஸ்பீக்கர்களில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்தவாறு அதிவேகத்துடன் ஷேர் ஆட்டோக்களை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஷேர் ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்களை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: