சீர்காழி, ஆக. 3: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசிப்பவர் ஆனந்த். இவரது மகள் கீர்த்தனா(20). இவர் மயிலாடுதுறை அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். மகள் காணாமல் போனதை அறிந்த அவரின் பெற்றோர், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கீர்த்தனா – மதன்ராஜ் ஆகிய இருவரையும், தேடி கண்டுபிடித்து, சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சீர்காழி காவல் நிலையத்திற்கு வந்த, காளி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மதன்ராஜ் தன்னை திருமணம் செய்ததாக கூறி இருந்ததாகவும், எனவே அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கீர்த்தனா குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது கீர்த்தனாவின் உறவினர் ராஜதுரை என்பவர், பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், காவல் நிலையம் முன்பு வந்த திருநங்கை ஒருவர், தனது உறவினரான கீர்த்தனாவை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு, ஒப்பாரி வைத்து கையை தட்டிக் கொண்டு அழத் தொடங்கினார். அவருடன் சேர்ந்து கொண்ட கீர்த்தனாவின் உறவினர்களும் சாலை விழுந்து புரண்டு, கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட காதலர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் மேஜர் என்பது தெரிய வந்தது.
அதில் கீர்த்தனா தனது காதல் கணவருடன்தான் செல்வேன் என்று உறுதியாக இருந்துள்ளார். இதன் காரணமாக பெற்றோர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார், காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மதன்ராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வந்த பெண்ணிடம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். காதல் ஜோடியின் திருமணம் காரணமாக தமிழ் சினிமா கிளைமேக்ஸ் காட்சி போல சீர்காழி காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
