கீழ்வேளூர் ஜூலை 31: கிள்ளுக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளுக்குடி ஊராட்சி கீழத்தெரு பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் பல முறை மனு கொடுத்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் வலியுறுத்தி நேற்று காலை கீழ்வேளூர் – கச்சனம் சாலையில் கிள்ளுக்குடி கடைத்தெருவில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வலிவலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்த சம்பவ இடத்திற்கு .கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜகோபால், சரவணன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா ஆகியோர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் கிள்ளுக்குடி கீழத்தெரு பகுதிக்கு தேவையான குடிநீர் வழங்க புதிய குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தட்டுப்பாடு இன்றி போதிய தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை எடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கீழ்வேளூர் கச்சலம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
