வைகை அணை பகுதியில் இரண்டாம் கட்டமாக சட்டவிரோத மின் மோட்டார்கள் பறிமுதல்

 

ஆண்டிபட்டி, ஜூலை 31: ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணை உட்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் நீர் திருடப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், வைகை அணையின் உட்பகுதிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டவிரோதமாக நீர் எடுப்பதை உடனடியாகத் தடுக்கும் வகையில், ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அப்புறப்படுத்தி பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்டார்.

ஆட்சியரின் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் வைகை அணையின் இடது கரை பகுதியிலுள்ள நீர்த்தேக்கத்தில் சட்டவிரோதமாக விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்திய மின்மோட்டார் பைப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக குன்னூர் வைகை ஆற்றுப் பகுதியில் இருந்து கரட்டுப்பட்டி பகுதி வரை ஆற்றங்கரையோரம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, மின் மோட்டார்கள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பைப்புகள் மற்றும் புட்வால்வ்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

வைகை அணை உதவி பொறியாளர்கள் நவீன் குமார் மற்றும் பரதன் தலைமையில், பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஏராளமானோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஆய்வின் முடிவில், சுமார் 30க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் பைப்புகள் மற்றும் புட்வால்வ்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுப்பணித்துறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வைகை ஆற்றுப் பகுதியிலும் அணையின் உட்பகுதியிலும் இதுபோன்ற சட்டவிரோத தண்ணீர் எடுப்பில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Related Stories: