1,650 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி: நகராட்சி நடவடிக்கை

 

பழநி, ஜூலை 31: பழநியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 1,650 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கோயில் நகரான பழநிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நகரில் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி உத்தரவின்பேரில் நகராட்சியின் பொது சுகாதாரதுறையினரால் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பழநி நகரில் 1,650 தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நாய்களை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பிடித்து ஒட்டன்சத்திரம் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவமனையில் டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மூலம் இனப்பெருக்க கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 238 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 1650 தெருநாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பழநி நகராட்சியில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட தெருநாய்கள் இனப்பெருக்க கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் தற்போது பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

எஞ்சிய தெருநாய்களுக்கு பழநி நகராட்சி மையத்திலேயே கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுமென ஆணையர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: