ராமநாதபுரம், ஜூலை 30: ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்னை நிலவி வருவதால், அதனை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் வலியுறுத்தியுள்ளார். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன் நேற்று சட்டமன்ற அலுவலகத்தில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி ஒன்றியங்களை சேர்ந்த பொதுமக்களின் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சாலை வசதி, பஸ் போக்குவரத்து, மின்சாரம், பயணியர் நிழற்குடை, நாடக மேடை, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்குண்டான மனுக்களை அந்தந்த அரசுத்துறை அதிகாரிகளிடம் அனுப்பி உடனடியாக தீர்வு எடுக்குமாறு உத்தரவிட்டார். அப்போது செய்தியாளரிடம் அவர் கூறும்போது, 2010ல் ரூ.616 கோடியில் காவிரி – ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இத்திட்டம் ரூ.555கோடி மதிப்பில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் சீரான குடிநீர் முறையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த அரசு முறையாக பராமரிக்காததால் கிராமங்களில் தற்காலிக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சீரமைக்க வேண்டும். மேலும் உள்ளூர் நீர் ஆதாரங்களான கிணறு, போர்வெல் ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் செல்லாத கிராமங்களுக்கு யூனியன் சார்பில் டேங்கர்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ரூ.2,819 கோடி மதிப்பிலான கரூர் – ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவாக முடித்து பயன்படுத்தி கொண்டுவர வேண்டும். முதுகுளத்தூர் தொகுதியில் 24 சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. அதனை விரைவாக முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். முடிவுற்ற கட்டிடங்கள், திட்டப் பணிகள் ஆகியவற்றை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சண்முகம், ஜெயபால், பூபதிமணி, கோவிந்தராஜ், ஹரி முத்துராமலிங்கம், சண்முகநாதன், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
