தேனி, ஜூலை 30: தேனி அருகே மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஒரு நாள் தொழிற்பயிற்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில், ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் தேனி, உத்தமபாளையம், மயிலாடும்பாறை, சின்னமனூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று கலெக்டர் வைத்திநாதன் பேசியதாவது: மகளிர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யவுள்ள தொழில் அமைப்புகளுக்கான பயிற்சி குறித்த விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இதில் நீங்கள் பயன் பெறுவதுடன் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
ஒரே மாதிரியான தொழிற்கூடங்களை உருவாக்குவதை தவிர்த்து, மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும். தற்போது மகளிர் குழுக்கள் வங்கி கடனுதவி மற்றும் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பங்களை இணையதளம் வழியாக அனுப்பும் வசதி உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, மகளிர் குழு உறுப்பினர்கள் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி, பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார். பின்னர் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோருக்கான கையேடுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வீராச்சாமி, உதவி திட்ட அலுவலர் அன்புராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
