மதுரை: மதுரை அருகே, அழகர்கோவிலில் ஆடி தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா… கோவிந்தா… என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலையில் உள்ள கள்ளழகர் கோவில் திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. 108 வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடிப்பெருந்திருவிழா.
இந்தாண்டு கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அன்னம், சிம்மம், அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு, சுந்தரராஜப் பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளினார். இதை தொடர்ந்து காலை 7.10 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடங்களை பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேருக்கும் முன்னும், பின்னும் பக்தர்கள் கைகளில் தடிகள், தீப்பந்தம் வைத்து கொண்டு உடலில் சந்தனம் பூசி சாமி ஆடியபடி சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து சென்ற தேர், 4 கோட்டை வாசல் ஆடி வீதி வழியாக சென்று, நிலையடைந்தது.
இதை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாளம் முழங்க, சந்தன குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடி செய்தும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி, அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட எஸ்பி மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர். தேரோட்டத்தையொட்டி நெல், தானியங்கள், பணமுடிச்சு, கன்று குட்டிகள் ஆகியவற்றை பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக வழங்கினர். கோவில் பிரசாதமான சம்பா தோசையை விரும்பி வாங்கி சென்றனர். தேர் திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். நாளை மறுநாள் புஷ்பசப்பரம் உற்சவ சாந்தியுடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது.
