காரைக்கால்: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகில் கழிவுகள் சேமிக்கும் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் துறைமுகத்திலிருந்து ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு கரை திரும்பிய மீனவர்கள், விசைப்படகுகளிலிருந்து மீன்களை இறக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது, காரைக்கால் மேடு சேர்ந்த முத்துவேல் என்பவர் கழிவு மீன் சேமிப்பு அறைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சக மீனவர்களான மயிலாடுதுறையைச் சேர்ந்த கதிரவன், அபினேஷ் மற்றும் அருண் ஆகிய மூவரும் அவரை மீட்க உள்ளே சென்றனர். அவர்களும் விஷவாயு தாக்கித் திடீரென மயங்கி கீழே விழுந்தனர்.
உடனடியாக நால்வரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கதிரவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மற்ற மூவரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
