தென்காசி,ஜூலை 29: காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி 30 ஆண்டுகளுக்கு மேலாக சமுதாய மக்கள் போராடி வரும் நிலையில் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்து கோஷங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் முழுவதும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் எஸ்டி சாதி சான்றிதழ் கேட்டு சுமார் 30 ஆண்டு காலமாக போராடிக் கொண்டு இருக்கிறோம். எங்களுடைய குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரி படிப்பை தொடர்வதிலும், வேலை வாய்ப்பை பெற முடியாத சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள காட்டு நாயக்கர் சமுதாய மக்களுக்கு (ST) சான்றிதழ் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
