சாத்தூர் அருகே நர்சரி பண்ணையான விளையாட்டு மைதானம்: இளைஞர்கள், மாணவர்கள் அவதி

சாத்தூர்: சாத்தூர் அருகே விளையாட்டு மைதானம் நர்சரி பண்ணையாக மாற்றப்பட்டுள்ளதால் இளைஞர்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லாததால் உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் இளைஞர்கள் கஷ்டப்பட்டு வந்தனர். கத்தாளம்பட்டிக்கு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் விளையாட்டு மைதானம் வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து ஊராட்சி செயல் அலுவலகம் முன்பாக இருந்த காலி இடத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள வசதியாக உபகரணங்கள், வாலிபால் விளையாட தனி மைதானம் அமைக்கப்பட்டது. இங்கு இளைஞர்கள், மாணவர்கள் காலை, மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மைதானத்திலிருந்த உபகரணங்களை நகராட்சி நிர்வாகம் அகற்றி செடிகள் வளர்க்கும் நர்சரி பண்ணையாக மாற்றியுள்ளது. விளையாட்டு மைதானம் நர்சரி பண்ணையாக மாற்றப்பட்டுள்ளதால் இளைஞர்கள், மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நர்சரி பண்ணையை வேறுபகுதிக்கு மாற்றி மைதானத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: