×

டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; போலீசாரின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

 

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி இயக்கத்தின் சார்பாக மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதேப்போன்று ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜால்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்த நிலையில், மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் விகாஸ் சிங் மற்றும் பவுசியா ஷக்கில் ஆகியோர் ஒரு முறையீட்டை வைத்தனர்.

அதில்,‘‘இந்த விவகாரத்தில் மேலும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதனை ஒன்றாக இணைத்து நாளை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாணவர் போராட்டத்திற்கு மிக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பீகாரில் இந்தப் போராட்டத்தின் போது ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது. இதேப்போன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோடூர சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன என்று தெரிவித்தனர்.அப்போது டெல்லி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘போராட்டத்தின் போது மாணவர்களால் காவல்துறையினர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் கண்டனங்களை தெரிவித்தனர். அதில்,‘‘அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, அதனை மறுக்க முடியாது. ஆனால் தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காக காவல்துறையின் அத்துமீறிய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் உயிரும் முக்கியமானது. போராட்டத்துக்கு என்று ஒரு நடைமுறை இருக்க வேண்டும். அதற்கான உரிய இடவசதி இருக்க வேண்டும். அமைதி வழி போராட்டத்துக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது.

ஆனால், போராட்டம் என்ற பெயரில் சமூக விரோத செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்.ஆனால், போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே தடியடி நடத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஜனநாயக செயல்முறைக்கு சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம் என்பது தேவை என்று தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இந்த போராட்டம் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு நடுநிலையான முறையில் நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Delhi ,Supreme Court ,New Delhi ,Cockroach Movement ,NEET ,
× RELATED மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும்...