×

குஜராத் ஆயுர்வேதப் பல்கலையில் அவுட்; மீண்டும் ஒரு தேர்வு வினாத்தாள் கசிவு: காங்கிரஸ் கடும் விமர்சனம்

 

புதுடெல்லி: ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தில், ‘பேச்சிலர் ஆஃப் ஆயுர்வேதிக் மெடிசின் அண்ட் சர்ஜரி’ பாடப்பிரிவின் ‘சல்ய தந்திரா-1’ தேர்வுக்கான முக்கிய விவரங்கள் தேர்வுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் பரவியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,’ மீண்டும் ஒரு தேர்வு வினாத்தாள் கசிவு – இம்முறை ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தில். இது ஏதோ ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல.

2014 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் குஜராத்தில் 34 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன. 2014-ல் ஜிபிஎஸ்சி லைமை அதிகாரி தேர்வு, 2015 மற்றும் 2016-ல் தலாதி தேர்வு, 2018-ல் ஆசிரியர் தேர்வு, முக்ய சேவிகா, நாயப் சிட்னிஸ் மற்றும் லோக்ரக்ஷக் தல் தேர்வுகள், 2019-ல் தலைமைச் செயலகம் அல்லாத எழுத்தர் தேர்வு, 2021-ல் தலைமை எழுத்தர், வித்யுத் உதவியாளர் மற்றும் துணை தணிக்கையாளர் தேர்வுகள், 2022-ல் வனக் காவலர் தேர்வு மற்றும் 2023-ல் இளநிலை எழுத்தர் தேர்வு ஆகியவற்றின் வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

2024-ல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உத்தரப் பிரதேச காவலர் பணி நியமனத் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம்கூட அகமதாபாத்திலிருந்துதான் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. பாஜ ஆட்சியின் கீழ் குஜராத் மாநிலம் இந்தியாவிலேயே வினாத்தாள் கசிவு சம்பவங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. மோடி அரசின் விரைவு நீதிமன்றங்கள் இந்த அமைப்புரீதியான பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. நமது தேர்வு மற்றும் கல்வி முறையை எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்து நேர்மையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Gujarat Ayurveda University ,Congress ,New Delhi ,Jamnagar ,WhatsApp ,
× RELATED மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும்...