கழிப்பறையை பராமரிக்காததால் நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு: முகம் சுழிக்கும் சுற்றுலா பயணிகள்

 

நாகப்பட்டினம், ஜூலை27: நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில், புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோயில் என மும்மத கோயில்கள் அமைந்துள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், யாத்ரீகர்களும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இது மட்டும் இன்றி நாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள காரைக்கால் மாவட்டம் திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்களும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை வந்து செல்கின்றனர்.

இவ்வாறு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் சுகாதார சீர்கேடு நிறைந்ததாக மாறி வருகிறது. பஸ்ஸ்டாண்ட் உள்ளே உள்ள கட்டண கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற முடியாமல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை புதிய பஸ்ஸ்டாண்ட் முழுவதும் சூழ்ந்து கொள்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, புதுச்சேரி மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்களை சுற்றி இந்த கழிவு நீர் நிற்பதால் இந்த பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால் பகுதிகளுக்கு செல்வதற்காக வருகை தரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து உள்ளே வருகை தர தயக்கம் அடைகின்றனர். கட்டண கழிப்பறையை குத்தகைதாரர்கள் கழிவறையை சுத்தமான முறையில் பராமரிப்பு செய்யாமல் இருப்பதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி பயணிகள் நிற்கும் பகுதிகள் முழுவதும் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்து விடுகிறது.

கோடை காலத்திலேயே இந்த நிலை ஏற்பட்டால் மழை காலங்களில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்து பஸ்ஸ்டாண்ட் முழுவதும் தேங்கி விடும். இந்த நிலை குறித்து பல முறை சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தும் விரைவில் நாகப்பட்டினம் பஸ்ஸ்டாண்ட் செல்லூர் அருகே மாற்றப்படவுள்ளது, அதனால் இந்த பஸ் ஸ்டாண்ட் சீர் செய்யப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். வேறு ஒரு இடத்திற்கு பஸ்ஸ்டாண்ட் மாறும் வரை நாகப்பட்டினம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்து செல்லாமல் போதிய வசதிகளை செய்து தர வேண்டும் என நாகப்பட்டினம் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related Stories: