எல்நினோ பாதிப்பால் வறட்சி அதிகரிக்கும்: குறைந்த தண்ணீர் செலவில், அதிக மகசூல் தரும் சாகுபடி குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும்: வேளாண் அமைச்சர் தகவல்

 

கும்பகோணம், ஜூலை 27: எல்நினோ பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், வறட்சி அதிகம் இருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் குறைந்த தண்ணீர் செலவில், அதிக மகசூல் தரக்கூடிய குறுகிய கால பயிர்களை அந்தந்த பகுதி விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விரைவில் வழிகாட்டுதல் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கும்பகோணம் பகுதியில் உள்ள கழிவுநீர் மற்றும் வடிகால் வாய்கால்கள் தூர்வாரப்படாமல் ஆகாய தாமரைகள் மண்டிக் கிடப்பதால் மழைக்காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கிவதால் பெரும் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். அதைத்தொடர்ந்து, ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் இந்த வாய்கால்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக செட்டிமண்டபம் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணிகளை வேளாண்துறை அமைச்சர் வினோத் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கும்பகோணம் பகுதியில் இனிவரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில், அனைத்து கழிவுநீர் மற்றும் வடிகால் வாய்க்கால்களும் முழுவதுமாக தூர்வாரப்படும். இதற்காக, சிட்டி யூனியன் வங்கியின் சமூக பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) மற்றும் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை பராமரிப்பு நிதியுதவியுடன் சேர்ந்து ரூ.70 லட்சம் நிதியுதவி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள இப்பணிகள் 20 நாட்களில் நிறைவுபெறும். வருகிற நாட்களில் எல்நினோ பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், வறட்சி அதிகம் இருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் குறைந்த தண்ணீர் செலவில், அதிக மகசூல் தரக்கூடிய குறுகிய கால பயிர்களை அந்தந்த பகுதி விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விரைவில் வழிகாட்டுதல் வழங்கப்படும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து கட்சி தலைமை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட தவெக பொருளாளர் விஜய்சந்திரன், மாநகர தவெக செயலாளர் முருகானந்தம், நீர்வளத்துறை காவிரி வடிநில கோட்ட தஞ்சை செயற்பொறியாளர் இளங்கோ, கும்பகோணம் காவிரி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துமணி, கும்பகோணம் காவிரி பிரிவு உதவி பொறியாளர் கார்த்திகேயன், நீர்வளத்துறை அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: