ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்தகால வன்முறைகளை காட்டாமல் தற்போதைய நேர்மறை மாற்றங்களை திரையில் கொண்டு வர பாலிவுட் திரையுலகினருக்கு முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கடந்த காலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, படகுகள் வெடித்துச் சிதறும் வன்முறைச் சம்பவங்களை மட்டுமே திரைப்படங்களில் சித்தரித்து வந்த நிலையில், தற்போது அங்கு நிலவும் அமைதி மற்றும் வளர்ச்சியடையும் சூழலை உலகிற்கு வெளிப்படுத்த சர்வதேச திரைப்பட விழா செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.
இதன் தொடக்கமாக நகரில் நடைபெற்ற முதலாவது காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, ‘இங்கு படப்பிடிப்பு நடத்தும் போது ஷிகாரா படகுகள் மற்றும் படகு வீடுகள் வெடிப்பதையும், துப்பாக்கிச் சூடு நடப்பதையும் போன்ற மோசமான சூழ்நிலைகளை மட்டுமே வழக்கமாக காட்டி வந்தது எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால், காஷ்மீரின் நிலைமை இப்போது முற்றிலும் மாறிவிட்டது; இந்த மாற்றத்தை உலகிற்கு திரையுலகினர் காட்ட வேண்டும்.
சில திரைப்பட தயாரிப்பாளர்கள் சுய அரசியல் லாபத்திற்காகவும், ஒன்றிய அரசை திருப்திப்படுத்துவதற்காகவும் உண்மைக்கு மாறான பொய்ப் பிரசாரப் படங்களை எடுக்கின்றனர். அதேவேளையில் அனைத்து பாலிவுட் கலைஞர்களும் தவறானவர்கள் அல்ல. இங்குள்ள குறைந்த கட்டண வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு, வேறு இடங்களைப் போல காஷ்மீரை திரைப்படங்களில் சித்தரிக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. திரைப்பட தயாரிப்பாளர்கள் இங்கு வந்து படப்பிடிப்பு நடத்துவதை எளிதாக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என்று அவர் கூறினார்.
