* கலெக்டர் வந்தனா கார்க் பேச்சு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மாணவர் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நடந்தது.அதில், டிஆர்ஓ சிவசுப்ரமணிய பிள்ளை, முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் வங்கி மேலாளர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாணவர்கள் அளித்த கல்விக்கடன் உதவி, கல்லூரி சேர்க்கை, விடுதி சேர்க்கை உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளித்து தீர்வு காண உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து, கலெக்டர் வந்தனா கார்க் பேசியதாவது:
மாணவர்கள் உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் இந்த முகாம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விரும்பிய பாடப்பிரிவை, படிப்பை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் வருத்தப்பட வேண்டாம். அனைத்து துறைகளிலும் சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
அரசு பணிகளில் சேர வேண்டும் என விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தால் மட்டுமே போதுமானது. அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு முறையாக பயிற்சி பெற்று வெற்றிபெறலாம். எனவே, உயர்கல்வியில் சேர்ந்து தங்களுடைய இலக்கை அடைய மாணவர்கள் ஆர்வமுடன் தொடர்ந்து படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 18,433 மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உயர் கல்வியில் சேருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று நடந்த முகாமில், 494 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். குறிப்பாக, 20 மாணவர்களுக்கு அரசு கலைக் கல்லூரிகளிலும், 2 மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், 9 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் உடனடி சேர்க்கை நேற்று வழங்கப்பட்டது.
