இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புச் சோதனைச் சாவடி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது மோதியது.
இதில் ராணுவ வீரர்கள், காவல்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டாங்க் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள், இரண்டு காவல்துறையினர் மற்றும் முன்னாள் வனத்துறையைச் சேர்ந்த ஒரு அரசு அதிகாரி உட்பட 15 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் என்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழு அப்பகுதியில் வன்முறையை ஏற்படுத்தி வருகிறது.
