டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பொங்கி எழுந்த பாலிவுட் பிரபலங்கள்: பேரணி வன்முறையாக மாறியதற்கு சல்மான் கான் வருத்தம்

 

புதுடெல்லி: டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நட்சத்திரங்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டெல்லியில் நீட்-யுஜி தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய அமைதியான மாணவர் போராட்டக்காரர்கள் மீது டெல்லி போலீசார் லத்திகள் மற்றும் பலப்பிரயோகத்தை பயன்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் முன்னணி நடிகர்கள், நடிகைகள் தங்களது குரலை எழுப்பத் தொடங்கியுள்ளனர்; மேலும் பலர் டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று மாணவர்களுடன் இணைந்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்த சோனம் வாங்சுக்கு ஆதரவாக ஜந்தர் மந்தர் போராட்டக்களத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரசித் சிங், கல்வி முறை சீர்திருத்தங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார். மாணவர்களின் மன உறுதி தனக்கு தைரியம் அளிப்பதாக மூத்த நடிகர் நசீருதீன் ஷா உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ள நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளார்; மேலும் நடிகை ஆயிஷா கான் போராட்டத்தின் போது போலீசார் பிடியில் தற்காலிகமாக கைது செய்யப்பட்டார். பொதுவெளியில் மாணவர்களுக்கு ஆதரவாக நின்ற நடிகர்கள் குணால் கம்ரா மற்றும் இம்ரான் கான் ஆகியோர், மாணவர்களிடம் நேர்மையான தேர்வை எதிர்பார்க்கும் நிர்வாகம் அவர்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மறுபுறம், பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான சல்மான் கான், ஆலியா பட், கரீனா கபூர் கான், சோனாக்ஷி சின்ஹா, சாரா அலிகான், பிரீத்தி ஜிந்தா, ஜெனிலியா ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அமைதியான பேரணி வன்முறையாக மாறியது குறித்து வருத்தம் தெரிவித்த சல்மான் கான், வினாத்தாள் கசிவு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்னை என்று சுட்டிக்காட்டியதோடு, சிறந்த கல்விக்காக போராடும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உறுதியைப் பாராட்டினார்; சமூக வலைதளங்களில் குரல் எழுப்பிய கரீனா கபூர் கான், ‘இனிமேலும் என்னால் மவுனமாக இருக்க முடியாது’ என்று கூறி தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கோரியுள்ளார்.

கல்வியாளர் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் சங்கங்களுடன் ஒன்றிய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கல்வி முறையை மேம்படுத்த வேண்டும் என்று நடிகை பிரீத்தி ஜிந்தா எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறாக பலரும் மாணவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: